ராமநாதபுரம் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம்: முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

 

ராமநாதபுரம், ஜன.6: ராமநாதபுரம் நகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையத்தை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். ராமநாதபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 2,535 புத்தகங்கள், வாசிப்புக்கூடம், கணினி மையம், குழந்தைகள் வாசிப்பு கூடம், ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், ஜெனரேட்டர், தோட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மண்டல செயற்பொறியாளர் மனோகரன், ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ஆணையர் அஜிதா பர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை