ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை

ராமநாதபுரம், ஏப்.30: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன்களை பறக்க விட தடை விதித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தேவிப்பட்டினம் சாலையிலுள்ள ராமநாதபுரம் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு 260 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘பாதுகாப்பு காரணங்களுக்காக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி