ராணிப்பேட்டையை சேர்ந்த விவசாயியின் மகள்கள் ஒரே மையத்தில் போலீஸ் பயிற்சி முடித்த 3 சகோதரிகள்

ராணிப்பேட்டை: விவசாய நிலத்தில் பயிற்சி செய்து ஒரே மையத்தில் போலீஸ் பயிற்சி முடித்த 3 சகோதரிகளால், விவசாயியான தந்தை மகிழ்ச்சியடைந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர்  வெங்கடேசன். விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இவர்களது மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி. இதில் மூத்த மகள் பிரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சகோதரிகள் 3 பேரும் காவல்துறையில் சேர வேண்டும் என்று உறுதி மேற்கொண்டு அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு 2ம் நிலை காவலர் தேர்வில் கலந்துகொண்டு தேர்வடைந்தனர்.  அதனைத்தொடர்ந்து, திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் சகோதரிகள் 3 பேரும் 2ம் நிலை காவலர் பயிற்சியை 2 நாட்களுக்கு முன்பு சிறப்பாக முடித்தனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் பயிற்சியை முடித்த சம்பவம்  அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயி வெங்கடேசன் கூறுகையில், ‘நான் பிளஸ்2 முடித்தவுடன் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வத்துடன் காவலர் தேர்வில் கலந்துகொண்டேன். ஆனால் தேர்வில் தகுதி பெற முடியவில்லை. அதனைத்தொடர்ந்து, விவசாயம் செய்து வந்தேன். எனது 3 பெண் பிள்ளைகளையும் நல்ல முறையில் படிக்க வைத்தேன். எனது மகள்களும் போலீஸ் வேலையில் சேர வேண்டும், என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தபடியே காவலர் தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டனர். எனது விவசாய நிலத்திலேயே பயிற்சி செய்தனர். எனக்கு கிடைக்காத போலீஸ் வேலை எனது 3 மகளுக்கும் கிடைத்தது பெருமையாக உள்ளது’ என்றார்….

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு