Tuesday, September 17, 2024
Home » ராஜ்மா… ஒரு முழுமையான உணவு!

ராஜ்மா… ஒரு முழுமையான உணவு!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்‘‘நம்மில் பெரும்பாலானோர் அறியாத, அதிகம் பயன்படுத்தாத உணவுப்பொருளில் ராஜ்மாவும் ஒன்று. ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் இதனை போதுமான அளவில் பயன்படுத்திக் கொண்டால் ஒரு முழுமையான உணவாக நமக்குப் பலனளிக்கும்’’ என்கிற டயட்டீஷியன் வினிதா கிருஷ்ணன், அது குறித்து விரிவாக விவரிக்கிறார்…‘‘ராஜ்மா(Rajma) என்ற உணவுப்பொருள் பருப்பு வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், மாவு, நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து என அனைத்து சத்துக்களும் நிறைவாகக் காணப்படுகிறது. இதனால், உடலுக்குத் தேவையான எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே, இந்த பருப்பு வகையை முழுமையான உணவு (Complete Food) என்றே சொல்லலாம்.இத்தகைய சிறப்புத்தன்மை கொண்ட ராஜ்மா நீரிழிவு, புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள், ரத்த அழுத்தம், கண்களில் ஏற்படும் பிரச்னைகள், சருமம் மற்றும் எலும்பு தொடர்பான பாதிப்புகள் என எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருவதாகவும், வராமல் தடுப்பதாகவும் உள்ளது. நன்றாக வேக வைத்த 150 கிராம் ராஜ்மாவில் 173 கலோரி, புரோட்டீன் 17 கிராம், கார்போ ஹைட்ரேட் 30.3 கிராம், கொழுப்பு 0.7 கிராம், சராசரியாகப் புரதச்சத்து 6.4 கிராம் உள்ளது. இவை தவிர, 100 கிராம் ராஜ்மாவில் மக்னீசியம் 26 கிராமும், பொட்டாசியம் 15 கிராமும் உள்ளது. உப்புச்சத்து அதிகரிப்பதால் வருகிற ரத்த கொதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், உடலில் அளவுக்கு அதிகமாக உள்ள உப்பினை வெளியேற்றுகிறது. ராஜ்மாவில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இன்று பரவலாகக் காணப்படும் ரத்த சோகைக்கு ராஜ்மா நல்ல மருந்து. மரபணு காரணமாக ஏற்படுகிற பார்வைக் குறைபாட்டையும் கட்டுப்படுத்துவதால், கண்களுக்கும் ராஜ்மா ஏற்றது. மேலும் கால்சியம், பொட்டாசியம் ஆகியவற்றை உடலில் சீராக வைக்க உதவுகிறது. இதனால், எலும்புகள் உருவாகவும், பலம் பெறவும், சிறு குழந்தைகளுக்குப் பற்கள் சீராக வளரவும் முடிகிறது. எனவே, இவர்களுக்கு எலும்புகள் வளர்ச்சி பெறும் நிலையில் கொடுப்பது நல்லது. முதுமைப் பருவத்தில் உண்டாகிற எலும்பு முறிவையும் இப்பருப்பு தடுக்க வல்லது. புரதச்சத்தும், நார்ச்சத்தும் கணிசமான அளவில் உள்ளது. GI என சொல்லப்படுகிற Glycemic Index 50-க்குள் இருந்தால் அந்த உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதன்படி பார்த்தால், ராஜ்மாவில் Glycemic Index 29-தான் உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கான நல்ல உணவுப்பொருள் என்றும் ராஜ்மாவைச் சொல்லலாம். நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடாமலோ, குறைந்து விடாமலோ பார்த்துக் கொள்ளும். முக்கியமாக, குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும்.நார்ச்சத்தில் Soluble Fibre(கரையக்கூடியது), In-Soluble Fibre(கரையும் தன்மை அற்றது) என்ற இரண்டு வகை உள்ளது. ராஜ்மாவில் Soluable Fibre அதிகமாக உள்ளது. இந்த நார்ச்சத்து உடலில் காணப்படுகிற கெட்ட கொழுப்பை (Low Density Lipo protein Cholesterol) வெளியேற்றி விடும். இதன் காரணமாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே, நமக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ராஜ்மாவில் புரதம் மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால், அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றாது. இதனால், உடல் எடை அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தப்படும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மைக்ரான் என்ற மினரல்சும், ஆன்டி-ஆக்சிடென்டும்(Anti-Oxidant) இதில் அதிகளவில் உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக ஏற்படுகிற கேன்சர் முதலான நோய்கள் தடுக்கப்படும். வயதான காலத்தில், எலும்பு முறிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, அந்தச் சமயத்தில் ராஜ்மாவைச் சாப்பிட்டு வருவது எதிர்பார்த்த பலனைத் தரும்.உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல் ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களை அதிகரிக்க செய்யவும் ராஜ்மா பயன்படுகிறது. அதாவது ஆணுக்குரிய ஹார்மோன் டெஸ்டோடிரோன், பெண்ணுக்குரிய ஹார்மோனான்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றையும் அதிகரிக்க இப்பருப்பு உதவுகிறது. 6 வயது முதல் வயதானவர்கள், கருவுற்ற பெண்கள் என அனைவரும் சாப்பிடலாம். உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். செரிமான குறைபாடு, வாயுத்தொல்லை வர வாய்ப்பு உள்ளதால், பச்சையாக உண்ணாமல், நன்றாக வேக வைத்து சாப்பிடலாம். இரவில் தாமதமாக நேரம் கழித்து சாப்பிடக் கூடாது என்பதும் முக்கியம்’’ என்கிறார்.– விஜயகுமார்

You may also like

Leave a Comment

twenty + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi