ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு: ஒன்றிய அரசு திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும், இதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை கடந்த 11ம் தேதி நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு விசாரித்து, 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இவர்கள் 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில், இவர்களை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நேற்று திடீரென சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  நடராஜ், இதை தாக்கல் செய்தார். அவர் அந்த மனுவில், ‘ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுதலை செய்யும்படி கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது,  எங்கள் வாதங்களை கேட்கவில்லை. எனவே, இவர்களை செய்யப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் சீராய்வு செய்ய வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பேரறிவாளனை தொடர்ந்து, நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் சிறைகளில் நீண்ட காலமாக உள்ள பல்வேறு கொலைக் குற்றவாளிகள், தங்களையும் 142வது சட்டப்பிரிவின்படி விடுதலை செய்ய உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் குண்டுவெடிப்பு குற்றவாளிகள், காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். இதனால், ஒன்றிய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதாக கருதப்படுகிறது….

Related posts

நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்

சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்