ராஜபாளையம் கூட்டு உள்ளூர் திட்டக்குழும ஆலோசனை கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பாக ராஜபாளையம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய ராஜபாளையம் கூட்டு உள்ளூர் திட்டக் குழும பகுதிக்கான முழுமைத் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தகக் கூட்டமைப்பு, விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடியிருப்பு வீடுகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் வெளியேற்றத்திற்கான வசதிகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பராமரிப்புடன் கூடிய பசுமை பூங்கா, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் நகராட்சி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளடக்கிய 149.05 சதுர கி.மீ. சுற்றளவு பகுதிகளை ராஜபாளையம் கூட்டு உள்ளூர் திட்டக் குழும பகுதியாக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை அனைவரும் புரிந்து கொண்டு, திட்டம் முழுமை அடைய ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர்(பொ) நந்தினி, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆளுகைக்குழு உறுப்பினர் நிர்மலா ராஜா, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், வர்த்தகக் கூட்டமைப்பு, விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை