ராஜபக்சே குடும்பத்தினர் விலக வலியுறுத்தி இலங்கையில் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்: மேலும் தீவிரமாகும் அபாயம்

கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே உட்பட ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் பதவி விலக வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். கடந்த 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், இலங்கை அரசு கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், காஸ், மின்சாரம், உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விலைவாசியும் கடுமையாக ஏறி உள்ளது.இதனால், ஆத்திரமடைந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில், அதிபர் மாளிகை முன்பு ஆர்பாட்டம் நடத்திய அவர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், கொழும்புவில் உள்ள காலீ வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த சனிக்கிழமை மதியம் இந்த வீதியில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். மாலை முதல் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அன்றிரவு முழுவதும் மக்கள் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். இந்த மக்கள் போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.இப்போராட்டத்தின் ஒருபகுதியாக, மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எம்பி.க்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், `ராஜபக்சே குடும்பத்தினர் பதவியை ராஜினாமா செய்வதை தவிர இதற்கு வேறு தீர்வு கிடையாது,’ என்று வலியுறுத்தினர். இதனால், ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜபக்சே குடும்பத்தினரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.41 எம்பி.க்களுடன் கோத்தபய சமரசம்இலங்கை அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, 11  கூட்டணி கட்சிகளை சேர்ந்த 41 எம்.பிக்கள் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த 41 எம்.பிக்களுடனும் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபரும் எஸ்எல்எப்பி தலைவருமான மைத்ரிபால சிறிசேனா உடனும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு