ராகு, கேது கோயிலில் ரங்கசாமி பரிகார பூஜை: கும்பகோணத்துக்கு திடீர் பயணம்

 

புதுச்சேரி, அக். 14: கும்பகோணம் அருகே உள்ள திருநாேகஸ்வரத்துக்கு சென்று ராகு மற்றும் கீழபெரும்பள்ளத்தில் உள்ள கேது கோயில் மற்றும் திருப்பாம்புரத்தில் ராகு-கேது பரிகார ஸ்தலத்துக்கு முதல்வர் ரங்கசாமி சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு பரிகார பூஜை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் ரங்கசாமி, ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர். மனசு சரியில்லை என்றால் சேலம் சூரமங்கலத்தில் பிரசித்திபெற்ற அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு செல்வார். தேர்தல் நேரத்திலும், முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் ரங்கசாமி, அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்.

மேலும் இவரது வீட்டின் அருகிலும் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலை நிறுவி தினமும் சென்று வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 8ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடந்தது. மறுநாள் 9ம் தேதி அமைச்சர் பதவியை சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தார். தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தலித், பாலின தொந்தரவு காரணங்களை கூறி அறிக்கை வெளியிட்டார். இதனால் ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது முதல்வரை சந்திக்க சென்ற நிருபர்களிடம் கோபமாக உங்களை யார் அழைத்தது, நாங்கள் அழைக்கும்போது வரலாம் எனக்கூறி சந்திக்க மறுத்துவிட்டார்.

சந்திர பிரியங்கா பரபரப்பு அறிக்கையால் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால் திடீரென முதல்வர் ரங்கசாமி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்துக்கு நேற்று காலை புறப்பட்டு சென்று ராகு பகவானை வழிப்பட்டார்.

அவர், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் என்பதால் பரிகார பூஜையும் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் கீழபெரும்பள்ளம் சென்று கேது பகவானை தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாயின. முன்னதாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரம்  சேஷபுரீஸ்வரர் (ராகு-கேது ஸ்தலம்) திருக்கோயிலில் முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்து பரிகார பூஜை செய்தார். முதல்வர் ரங்கசாமி திடீரென பரிகார ஸ்தலங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி

வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை

திருமலைக்கேணி கார்த்திகை விழா