ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

திருவொற்றியூர், ஜூலை 3: ரயில்வே நிலையத்தில் பெட்டிக் கடை வைத்து தருவதாக, பாஜ மாவட்ட செயலாளர் ₹2.5 லட்சம் பெற்று ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தண்டையார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் ராமராஜன். பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நவமணி (48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நவமணி, தண்டையார்பேட்டையில் ரயில் நிலைய நடைபாதையில் பெட்டிக் கடை வைக்க முயற்சி செய்து வந்தார்.

இதற்காக, கடந்த 2022ம் ஆண்டு, ரயில்வே கமிட்டியில் உறுப்பினராக உள்ள, பாஜ வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.செந்தில் (52) என்பவரை சந்தித்து, உதவி கேட்டுள்ளார். அப்போது அவர், ரயில்வே நிர்வாகத்தில் எனக்கு அதிகாரிகளை தெரியும். அதை பயன்படுத்தி, ரயில் நிலைய நடைபாதையில் கடை நடத்த உனக்கு உதவி செய்கிறேன், என வாக்குறுதி அளித்துள்ளார். பின்னர், சில நாட்கள் கழித்து நவமணியை சந்தித்த பாஜ நிர்வாகி செந்தில், ‘‘கடை நடத்துவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசிவிட்டேன். அவர்களும் சம்மதித்து விட்டார்கள். ஆனால், அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்போது தான் முறைப்படி அனுமதி கிடைக்கும்,’’ என கூறியுள்ளார்.

அதன்பேரில் நவமணி, தனது நகைகளை அடமானம் வைத்தும், வெளியில் சிலரிடம் கடன் பெற்றும் ₹2.5 லட்சத்தை செந்திலிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை வாங்கிய செந்தில், பல மாதங்கள் ஆகியும் ரயில் நிலையத்தில் கடை நடத்த அனுமதி பெற்றுத்தரவில்லை. நவமணி பலமுறை செந்திலை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்துள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த நவமணி, தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதையும் கொடுக்காமல் அலைக்கழித்ததுடன், தன்னை பணம் கேட்டு தொல்லை செய்யக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் நிலையம், மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம், பாஜ மூத்த தலைவர்களிடம் புகார் கொடுத்தும் நவமணிக்கு பணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செந்தில் வீட்டிற்குச் சென்ற நவமணி, தனது பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, செந்தில் ஆபாசமாக நவமணியை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவமணி, நேற்று வீட்டில் இருந்தபோது அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, தனது இறப்புக்கு காரணம் பாஜ பிரமுகர் செந்தில்தான் எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேணடும் எனவும் நவமணி எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதை வைத்து செந்திலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்