ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கியது மாநகர பேருந்து: 5 மணிநேரத்திற்கு பிறகு அகற்றம்

திருவொற்றியூர், நவ. 23: மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப்பாதையில் சென்றபோது மழை நீரில் சிக்கிய மாநகர பேருந்தை கிரேன் மூலம் 5 மணி நேரம் போராடி அகற்றினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இதில், சென்னையில் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை செங்குன்றத்தில் இருந்து திருவொற்றியூரை நோக்கி மாநகரப் பேருந்து (தடம் எண் 157) மூலக்கொத்தளம் பேசின் சாலை வழியாக சென்றது. மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப் பாதையில் சென்றபோது அங்கு தேங்கி இருந்த மழைநீரில் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். உடனடியாக, பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கி விட்டனர். இதை தொடர்ந்து, பேருந்தை கிரேன் மூலம் 5 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் வேளாங்கண்ணி சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். மாநகர பேருந்து மழைநீர் சிக்கிய சம்பவம் மூலக்கொத்தளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை