ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 43 பேரிடம் ரூ.1.70 கோடி மோசடி; தென்னக ரயில்வே கபடி பயிற்சியாளர் கைது

சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 43 பேரிடம் ரூ.1.70 கோடி மோசடி செய்த வழக்கில் தென்னக ரயில்வே கபடி பயிற்சியாளரை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை பரணிபுத்தூரைச் சேர்ந்த வினோத் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘தென்னக ரயில்வே கபடி பயிற்சியாளராக உள்ள ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள எடப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன்(37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ரயில்வே கபடி குழுவில் பயிற்சியாளராக இருப்பதால் எனக்கும், எனது சகோதரனுக்கும் தென்னக ரயில்வேயில் இளநிலை பொறியாளர் வேலை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி அவர் கூறியபடி ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்தேன். பிறகு ரயில்வேயில் இளநிலை பொறியாளருக்கான பணி நியமன ஆணைகள் கொடுத்தார். அதன்படி நான் எனது சகோதரனும் ரயில்வேயில் கொண்டு சென்று காட்டிய போது இது போலியான பணி நியமன ஆணை என கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் ஜெயகாந்தனிடம் கேட்டோம் ஆனால் அவர் முறையாக பதில் சொல்லாமல் மிரட்டி வந்தார். எனவே அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜெயகாந்தன் தென்னக ரயில்வே கபடி பயிற்சியாளராக இருப்பதாக கூறி இது போல் 43 பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர், ரயில்வேயில் இணை பொறியாளர், இளநிலை பொறியாளர், டிக்கெட் பரிசோதனை அதிகாரி, மெக்கானிக், ஆர்பிஎப் பணிகள் வாங்கி தருவதாக ரூ.1.70 கோடி பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. பணம் கொடுத்த பட்டதாரிகளுக்கு ரயில்வே துறை வழங்கியது போல் போலியான பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியதும் உறுதியானது.அதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட தென்னக ரயில்வே கபடி பயிற்சியாளர் ஜெயகாந்தனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி பணி நியமன ஆணைகள் மற்றும் அரசு முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயகாந்தன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாதிக்கப்பட்டோர் புகார்கள் அளித்து வருவதால் ஜெயகாந்தனை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு