ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம், ஆக.19: சேலம் வழியே கேரளா சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ஆர்பிஎப் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் தொடர்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து தொடர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தவகையில், சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீஸ் எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையில் உதவி எஸ்ஐ பினு, ஏட்டுகள் சௌந்தரராஜன், பெரியசாமி ஆகியோர் நேற்று முன்தினம், சாலிமர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சேலத்தில் இருந்து கோவை வரை அந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டனர். அதில், முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று 2 பேக்குகள் கிடந்தன. அந்த பேக்கை எடுத்து ஆர்பிஎப் போலீசார் பரிசோதித்தனர். அதனுள் 14 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ₹3.50 லட்சமாகும். பறிமுதலான கஞ்சாவை கோவை ஆர்பிஎப் போலீசில் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்தனர். இக்கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர், ஆர்பிஎப் போலீசாரின் சோதனையை பார்த்ததும், தப்பியோடியது தெரியவந்தது. அதனால், அந்த மர்மநபர் யார்? என்பது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு