ரயிலின் வேகம் அதிகரிப்பால் 3 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றி சாதனை: மதுரை கோட்ட மேலாளர் தகவல்

 

மதுரை, மார்ச் 11: மதுரை கோட்ட ரயில்வேயில், 2023-24 நிதியாண்டில் 3 மில்லியன் (30 லட்சம்) டன் சரக்குகள் ஏற்றப்பட்டு சாதனை படைத்துள்ளதாக, கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை கோட்டத்தில் 18 சரக்கு ஏற்றும் நிலையங்கள் உள்ளன.

இதேபோல், தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 7 சரக்கு ரயில் பாதைகளும் உள்ளன. இவற்றில் தூத்துக்குடி துறைமுகம், ஸ்பிக் நிறுவனம் போன்றவைகளும் அடங்கும். மதுரை கோட்ட ரயில்வேயில், சரக்கு ரயில்களில் ஏற்றிச்செல்லும் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிலக்கரி, உரங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இதற்கிடையே முந்தைய ஆண்டுகளில் 2.94 மில்லியன் டன்கள் சரக்குகள் மதுரை கோட்டத்தில் ரயில்களில் ஏற்றப்பட்டன. ஆனால் நடப்பு நிதியாண்டில் 2024 மார்ச் 7ம் தேதி வரை, சரக்கு ரயில்களில் 3 மில்லியன் (30 லட்சம்) டன் சரக்குகளை ஏற்றப்பட்டு மதுரை கோட்டம் புதிய சாதனை படைத்துள்ளது. சரக்கு ரயில்களின் வேகத்தை மணிக்கு 35.6 கி.மீ. என அதிகரித்ததன் மூலம், இந்த சாதனையை எட்டிப்பிடிக்க முடிந்துள்ளது. அதேபோல், உரங்கள், நிலக்கரி, கரி, டிராக்டர், சிமென்ட் போன்ற பொருட்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதும் இதற்கு காரணமாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை