Thursday, July 4, 2024
Home » ரத்த சோகையை ஏற்படுத்தும் கஃபின் அலெர்ட் ப்ளீஸ்!

ரத்த சோகையை ஏற்படுத்தும் கஃபின் அலெர்ட் ப்ளீஸ்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர்

பெண் குழந்தைகளுக்கு, பருவமடைந்த காலம் முதல் கல்லூரிக் காலம் வரையில், ஊட்டச்சத்துக்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் பெண்ணுடல் பருவம்தோறும் மாறிக்கொண்டே
யிருக்கும் இயல்புடையது. எனவே,  அதற்கான உணவுகளைக் கொடுத்து, சத்துக்களை ஈடுசெய்து கொண்டேதான் இருக்க வேண்டும்.  இவற்றுள் ஏதேனும் குறைபாடு ஏற்படும் நிலையில், முதல் பாதிப்பு ரத்த சோகை யாகத்தான் இருக்கிறது.

உலகளவில் ரத்தசோகையின் பாதிப்பு 29.9% இருப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார மையம். அதே நேரம், எஸ்.ஆர்எல்  SRL என்ற ரத்த பரிசோதனை மையம் 2015 முதல் 2021 வரையில் ஏழு வருடங்களாக மேற்கொண்ட ஆய்வில், ஏறக்குறைய 46% ரத்தசோகை பாதிப்பு 15 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்கே இருக்கிறது என்று உறுதிபடுத்தியுள்ளது.  இதில் வேதனை என்னவென்றால், ரத்த சோகை என்றாலே, இரும்புச்சத்து பற்றாக்குறைதான். பேரீச்சம்பழம் அல்லது பீட்ரூட் சாப்பிட்டு வந்தாலே, ரத்த சோகையை சரிப்படுத்திவிடலாம் என்று இன்றளவும் பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதுதான். உலக சுகாதார மையத்தின் அளவீடுகளின்படி ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவானது  6 முதல் 59 மாதங்கள் வரை உள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 11 கிராமுக்குக்  குறைவாகவும், 5 முதல் 11 வயதுள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 11.5 கிராமுக்குக் குறைவாகவும்,  12 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தையின் ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 12 கிராமுக்குக் குறைவாகவும் இருந்தால், அவர்களுக்கு ரத்த சோகை நோய் இருப்பதாக வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. மலேரியா, ஹெல்மின்த் எனப்படும் குடற்புழு, நாட்பட்ட காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்றவையும் குழந்தைகளிடம் ரத்த சோகையை ஏற்படுத்துகின்றன. ரத்தசோகையை சரிசெய்ய வேண்டுமெனில், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் புரதம் ஆகிய மூன்று சத்துக்களும் மிக மிக அவசியமானவை. இதில் எது ஒன்று குறைவாக இருந்தாலும் ரத்தத்தின் சிவப்பணுக்களிலுள்ள ஹமோகுளோபின் அளவும் சரியாக இருக்காது. காரணம், இந்த மூன்று சத்துக்களும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து, உயிர்வேதியியல் வினைகளை நிகழ்த்தி ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமில்லாமல், இரும்புச்சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருளை சாப்பிடும்போது, உட்கிரகிக்கப்படும் இரும்புச்சத்தின் அளவு, அதே உணவு அல்லது அந்த உணவுடன் சாப்பிடும் பிற சத்துக்களைப் பொருத்தே அமைகிறது. அவ்வகையில், வைட்டமின் சி நிறைந்த உணவுகள், மீன் மற்றும் இறைச்சி உணவுகள் இரும்புச்சத்தின் உட்கிரகிப்பை அதிகப்படுத்துகின்றன. அதே வேளையில், நார்ச்சத்து அதிகமுள்ள தாவர உணவுகள், டீ, காபி, கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் இரும்புச்சத்து உட்கிரகிப்பை குறைத்துவிடுகின்றன. இவற்றுள் மிக முக்கியமான பொருள் கபின். ஒரு கப் டீ 75 % – 80 % வரையில் இரும்புச்சத்தின் உட்கிரகிப்புத் திறனைக் குறைக்கும் நிலையில், ஒரு கப் காபியானது 60 % அளவிற்கும் குறைத்துவிடுகிறது. இவையிரண்டையும் மிகவும் அதிகமாக அல்லது திடமாகக் குடிக்கும்போது, உட்கிரகிப்புத் திறன் மேலும் குறைகிறது. பலவகையானத் தாவரங்களின் இலைகள், விதைகள், காய்கள் மற்றும் பழங்களில் இந்த “கபின்” (caffeine) என்னும் ஒருவகையான நுண்பொருள் இருக்கிறது. கசப்புத்தன்மையைக் கொடுக்கும் இப்பொருள், 100 கிராம் காப்பிக்கொட்டையில் 1.9 மில்லி கிராம் கபின் என்றளவில், இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது.இக்காப்பிக் கொட்டையை பானமாகத் தயாரித்துக் குடிக்கும்போது, கவனிப்புத் திறன், கற்பனைத் திறன், சிந்தனைத் திறன் உள்ளிட்ட குணாதிசயங்களை அதிகப்படுத்தும் ஒருவித ஊக்கத்திறன் கிடைக்கிறது. இதனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகும், ஆஸ்துமா நோய்க்கும் மருந்தாகவும், விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கபானமாகவும் மருத்துவத் துறையில் கபின் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், தொடர்ச்சியான பயன்பாடு அல்லது வரையறுக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக உட்கொள்ளுதல் போன்றவை உடலில் தீய விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. பெரியவர்கள்தானே காபி அல்லது டீ குடிக்கிறார்கள்? இதனால் சிறுவர்களுக்கும் அவர்களின் இரும்புசத்து உட்கிரகிப்பு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் பெரியவர்களைவிட சிறுவர்களின் உடலுக்குள்தான் கஃபின் அதிகம் செல்கிறது என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் குழந்தைகளுக்கான உணவியல் வல்லுநர்கள். முன்புபோல் அல்லாமல், குழந்தைகள் பலரும் இப்போது காபியும் டீயும் குடிக்கிறார்கள். மேலும், கபின் (caffeine); காபியில் மட்டும் இருப்பதில்லை. குழந்தைகள் மிகவும் விரும்பியுண்ணும் சாக்லேட்கள், டீ, சத்துபானங்கள், வகை வகையான சோடாக்கள், ஊட்டச்சத்தைக் கொடுக்கும் மருந்துணவுகள் (Food Suppliments) போன்ற அனைத்திலும் இருக்கிறது. ஒரு உணவுப் பொருளிலுள்ள “உள்ளடக்கப் பொருட்களின் பட்டியல்” (Food Labels)  குறிப்பில் அந்த உணவைத் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் கபின் அளவைக் குறிப்பிடுவதை மட்டுமே அவசியம் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வரையறைகள் கொடுத்து இருக்கிறது.  இதனால், இயற்கையிலேயே மூலப்பொருட்களில் இருக்கும் கபின் அளவு பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. சாக்லேட்டின் ஒரு கட்டம் அளவு (1 பார்) என்பது ஏறக்குறைய 28 கிராம். அதில் 23 மில்லி கிராம் கபின் இருக்கிறது. அதுவே,  70-80 கோகோவினால் செய்யப்பட்ட Dark Chocolate-ல் நிறமும் திடமும் அடர்த்தியாக இருக்கும். 100 கிராம் அளவுள்ள காபி சாக்லேட்டுகளில் 80 மில்லிகிராம் கபின் இருக்கிறது. பல ஆய்வுகள் இவ்வாறு இருக்கும் வேளையில், சில புதிய ஆய்வுகள், கபின் பொருளுக்கும் இரும்புச்சத்து உட்கிரகித்தலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனாலும், எந்த வகையான உணவுப்பொருளுடன் காபியோ அல்லது டீயோ சேர்த்து குடிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து இரும்புச்சத்தின் உட்கிரகிப்பு நிகழ்கிறது என்றும் கூறுகிறது. அதாவது, தாவர வகை உணவுப் பொருட்களில் பெரும்பாலும் டானிக் அமிலம், பாலிபினால்கள், டிரிப்ஸின் குறைப்பான்கள் போன்ற “உணவு எதிர் பொருட்கள்” (Anti nutrients)  இருக்கின்றன. இவையே அந்த உணவிலுள்ள இரும்புச்சத்து உட்கிரகிப்பைத் தடுக்கின்றன என்றும் உறுதியாகக் கூறுகின்றனர். அதாவது, உணவு எதிர் பொருட்களின் அளவு அதிகமானால், இரும்புச்சத்தின் உட்கிரகிப்பு குறையும் என்பதாகும். அவ்வகையில், 20 – 50  மில்லி கிராம் உணவு எதிர்பொருட்கள் இருந்தால், இரும்புச்சத்து உட்கிரகிப்புத்தன்மை 50 – 70 சதவிகிதம் குறைந்துவிடும். ஆகவே குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் பானங்களில் 100 – 400  மில்லி கிராம் அளவிலான எதிர்பொருடட்கள் 60 – 90 சதவிகிதம் வரையில் உணவிலிருந்து இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதைக் குறைத்துவிடுகிறது. புதுதில்லியில் குழந்தைகளிடம் நடத்தப்பெற்ற ஆய்வில் ஏறக்குறைய 97 சதவிகித பருவ வயதினர் ஒரு நாளைக்கு 98.2 மில்லிகிராம் அளவில் கபினையும், 6 சதவிகிதத்தினர் 300 மில்லிகிராம் அளவில் கபினையும்  எடுத்துக்கொள்ளும் நிலை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியான செய்திதான். சோடா மற்றும் கோலா வகை பானங்கள், சாக்லேட் மற்றும் சத்துபானங்களிலிருந்தே வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையால் ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் கபின் (4 அல்லது 5 கப் காபியில் இருப்பது) என்பது “பாதுகாப்பான அளவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த கபின் பிற ஊட்டசத்துகளுடன் செயல்வினை புரிவதும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளும் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள்,  கர்ப்பிணிகள் என்று வயதையும், உடல் தன்மையையும் பொருத்தே அமைகிறது என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.   எனவே, சிறு குழந்தைகள் மற்றும் பருவ வயதினர், அதிகளவில் கபின் இருக்கும் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக சாப்பிட நேர்ந்தால், ரத்த சோகை ஏற்படலாம். இந்நிலையைத் தவிர்க்க வேண்டுமென்றால், சாக்லேட் உணவுகள், குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு, புரதம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த நல்ல உணவுகளையே உண்ண வேண்டும். …

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi