Thursday, June 27, 2024
Home » ரதசப்தமியன்று கலசப்பாக்கத்தில் தீர்த்தவாரி கொள்ளும் அண்ணாமலையார்

ரதசப்தமியன்று கலசப்பாக்கத்தில் தீர்த்தவாரி கொள்ளும் அண்ணாமலையார்

by kannappan

கும்பாபிஷேகமோ, யாகமோ, ஆகம பூஜைகளோ எதுவாயினும் சரி, கலசம் வைப்பது என்பது மிக முக்கியமானதாகும். கலசமே இறைவனுடைய ரூபம். பிரபஞ்சத்தின் சகல சக்திகளையும் தனக்குள் பொதித்து வைத்து பரவவிடும் ஆற்றல் கும்பத்திற்கு உண்டு. எனவேதான் அதை கோபுரத்தின் உச்சியில் வைக்கின்றனர். அப்படிப்பட்ட ஈசனின் திருமுடி எனப்படும் கலசத்தை திருமால் பூஜித்த தலமே கலசப்பாக்கம். பார்வதி தேவி, ஈசனின் வலப் பாகத்தினை அடையும் பொருட்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணமானாள். ஓரிடத்தில் வாழை இலைகளால் வாழைப் பந்தல் அமைத்து தங்கினாள். பிறகு முருகனை நோக்கி நீர் வேண்ட குமரக் கடவுள் வேலால் ஓர் இடத்தை துளைக்க அங்கிருந்து நீர் ஆறாக பொங்கிப் பெருகியது. இவ்வாறு சேயாறு உற்பத்தியான இந்த ஆறு, சேயாறு என்றானது. இதே சமயத்தில் பிரம்மாவும் திருமாலும் அக்னி ஸ்தம்பமாக அருணாசலம் எனும் தலத்தில் பெருமானின் அடி -முடியை தேடிய வண்ணம் இருந்தனர். பிரம்மா ஹம்ஸ (அன்னப்) பறவையாக ஆகாயம் நோக்கி அக்னி ஸ்தம்பத்தின் மேலாகவும், திருமால் வராஹ (பன்றி) ரூபத்தோடு பூமியை அகழ்ந்து கொண்டும் சென்று இருவருமே முடிவில்லாத ஈசனின் சொரூபத்தை காணாது திகைத்து அயர்ந்து போயினர். அண்ட பேரண்டமான ஆதி சக்தியான அருணாசலம் எனும் பரமாத்மாவின் வடிவை எவராலும் அளக்க முடியாது. அருணாசலத்தின் மகிமை இவ்வளவுதான் என்று எவராலும் முழுவதும் உரைக்க முடியாது. அதன் சொரூபம் இன்னதுதான், இப்படிப் பட்டதுதான் என்று அறிய முடியாது. யக்ஞ யாகாதிகளை செய்து கொண்டேயிருந்தாலும் கூட அருணாசலத்தை அடைந்து விட முடியாது. இப்படியாக பல்வேறு தத்துவ நோக்கில் அமைந்த இந்த வராஹ ரூபத்தில் தொடர்ந்து அகழ்ந்து கொண்டே போயும் தேடல் ஒரு முடிவுக்கு வராது என்ற இயலாமைக்குப் பின் சரணாகதி நிலைக்கு வந்தார் வராஹர். அப்போதுதான் இந்த சேயாற்றின் பிரவாகத்தோடு கலசமும் மிதந்து வந்து கொண்டிருந்தது. ‘ஆஹா, இது மதி சூடியவனின் கலச முடியல்லவா!’ ஈசனின் அடிதேடிய திருமால், அந்தக் கலசத்தை கண்டு மகிழ்ச்சி கொண்டார். சேயாற்று தீர்த்தத்தையும் ஆங்காங்கு இருக்கும் நந்தவனங்களில் மலர்ந்திருக்கும் ஆயிரம் மலர்களையும் கொண்டு குபேர மூலையில், ஒரு மேடான பகுதியில் கலசத்தை ஸ்தாபித்து பூஜித்தார். இவ்வாறு ஈசனின் திருமுடியை திருமால் ஆனந்தமாக பூஜித்ததால் இத்தல ஈசனுக்கு திருமாமுடீஸ்வரர் எனும் திவ்ய நாமம் ஏற்பட்டது.    புராண நிகழ்வுகள் எப்போதுமே ஒரு தலத்தில் மட்டும் நடந்து முடிவடைவதில்லை; அதைச் சுற்றிலுமுள்ள தலங்களிலும் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தொடர் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. புராண நிகழ்ச்சியின் மைய விஷயம் எங்கு நடந்ததோ அதுவே பெருந்தலமாக விளங்குகிறது. ஆனால், அந்த மையத்தை தவிர, அது சார்ந்த மற்ற புராண சம்பவங்கள் அனைத்துமே சுற்றிலுமுள்ள தலங்களில் நடந்திருக்கும். அப்படித்தான் கலசப்பாக்கம் எனும் இத்தலமும் தோன்றியது. இத்தலம் திருவண்ணாமலைக்கு அருகேயுள்ளது. ஆனால், புராண சம்பவத்தின்படி திருவண்ணாமலைக்கு மிக நெருக்கமாயிருக்கிறது. கோயிலே சற்று மேடான பகுதியில்தான் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுரமாக இருந்தாலும் ரம்மியமான சூழலில் பாங் கோடு அமைந்திருக்கிறது. கோபுர வாயிலுக்குள் நேரே தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். கோயிலின் பிராகாரத்திற்குள் நுழைந்து வலதுபுறம் வழியே சென்று முன்புற மண்டபத்தைக் கடந்து மூலக் கருவறையை அடையலாம். துவார பாலகர்களுக்குப் பின்னால் உள்ளே லிங்கத் திருமேனியில் திருமாமுடீஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமாலே பூஜித்த ஈசனாதலால் அருட்பிரவாகம் பெருநதிபோல அவ்விடத்தில் பெருகியிருக்கிறதை உணர முடிகிறது. அசலமான அருணாசலத்திற்கு அருகிலே அமர்ந்த திருமால் பூஜித்ததால் நம் மனமும் இந்த சந்நதியின் சாந்நித்தியத்தில் அடங்கி விடுகிறது. இதற்குமேல் வழிபடுவதற்கு ஏதுமில்லை என்று திருமாலே ஈசனின் திருமுடியை இத்தலத்தில் வழிபடுகிறார். இது சரணாகத தலம் ஆகும். இங்குள்ள ஈசனை தரிசியுங்கள். இறைவனின் காட்சி கிட்டும் என்று திருமாலே உறுதி கூறும் கோயிலாகும். கருவறைக்கு முன் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான சந்திரசேகரரையும், திரிபுரசுந்தரியையும், சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ரத சப்தமியன்று நடைபெறும் ஆற்றுத் திருவிழாவின்போது இந்த மூர்த்திகள் சேயாற்றங் கரைக்கு எழுந்தருள்வர். அதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திலிருந்து உற்சவத் திருமேனிகள் எழுந்தருளி தீர்த்தவாரி எடுத்துக் கொள்வார்கள். அன்று முழுவதும் சேயாற்றங் கரையிலேயே இரு தல மூர்த்திகளும் பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு தத்தமது தலங்களுக்கு மீண்டும் செல்வர். அதேபோன்று சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடக்கும். அதில் சித்ரா பௌர்ணமி பத்தாம் நாள், திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கும் இறைவனுக்கு தும்பை மலர்களால் மாலை தொடுத்து வணங்குவார்கள். பிராகார வலம் வரும்போது முறையே தட்சிணாமூர்த்தி, துர்க்கைம்மன், குமரக் கடவுள், பைரவர் ஆகிய சந்நதிகளை தரிசிக்கலாம். தனிச் சந்நதியில் திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறாள். அபய – வரத ஹஸ்தங்களோடு பேரழகு மிளிர, நின்ற கோலத்தில் கோலோச்சுகிறாள். வேண்டாததை நீக்கி வேண்டுவனவற்றை தாயுள்ளத்தோடு வாரித் தருகிறாள். இச்சந்நதியின் வாயிலிலேயே மிகப்பழமையானதும் அரிதானதுமான ராஜதுர்க்கையை தரிசிக்கலாம். கோயிலை வலம் வந்து கொடிமரத்தில் வீழ்ந்து வணங்கி நிமிர திருமாமுடியின் பேரருள் நம்மை நிறைவிப்பதை உணரலாம். திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் பாதையில் 25 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. படங்கள்: சு. திவாகர்செய்தி:கிருஷ்ணா…

You may also like

Leave a Comment

ten + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi