ரங்கசாமி தலைகீழாக நின்றாலும் பெற முடியாது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதுவைக்கு 3 மாதத்தில் மாநில அந்தஸ்து

புதுச்சேரி, ஆக. 18: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதுவைக்கு 3 மாதத்தில் மாநில அந்தஸ்து பெறுவோம் என முன்னாள் முதல்வர் நாரயாணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜவஹர்லால் நேரு பெயரில் இயங்கி வந்த அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றி பிரதமர் அருங்காட்சியகம் என்று பெயர் பிரதமர் மோடி சூட்டியுள்ளது. மோடி ஆட்சி அமைந்து கடந்த 9 ஆண்டுகளில் தலைவர்களின் பெயர்களை மாற்றுவதும், கடந்த கால சரித்திரத்தை மறைப்பது போன்ற வேலையை செய்து வருகிறார். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று அப்பட்டமான பொய்யை கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழக ஆளுநர் விளையாடி இருக்கிறார். புதுச்சேரி கவர்னர் தமிழிசையும், நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். நீட் தேர்வால் மாணவர்கள் பலனடைந்துள்ளனர் என்று மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார். தமிழக மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் துரோகி என்றால், புதுச்சேரி கவர்னர் தமிழிசையும் மாணவர்களுக்கு எதிரியாக இருக்கிறார். கவர்னர் தமிழிசை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

பொறுப்பு கொடுத்த தெலங்கானாவுக்கு செல்வதில்லை. புதுச்சேரியில் இருந்து தமிழகம் சென்று அரசியல் பேசுகிறார். இது ஒரு ஆளுநருக்கு அழகல்ல. தமிழக-புதுச்சேரி பிரச்னையில் பொது கருத்துகளை வெளியிட விரும்பினால் தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டு கருத்து தெரிவிக்கலாம். இவர்கள் அமித்ஷாவின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள். முதல்வர் ரங்கசாமி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாநில அந்தஸ்து பெறுவோம் என்று கூறுவார். அவருக்கு பிரச்னை வரும் போதெல்லாம் இதனை கையில் எடுத்துக்கொள்வார். ரங்கசாமி முதல்வராக இருக்கும் வரை, அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது.
2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால், 3 மாதத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் கொடுப்பார்கள்.

இதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், ரங்கசாமி தலைகீழாக நின்றாலும் மாநில அந்தஸ்து பெற முடியாது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து 10,000 பேருக்கு மட்டும் ஒரு மாதம் உதவித்தொகையை வழங்கி விட்டு, பிறகு அத்திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்ட கோப்பு எங்கு கிடக்கிறது என்று தெரியவில்லை. நிதி இல்லாமல் திட்டங்களை அறிவித்துவிட்டு அதிகாரிகளை குறை கூறிவிட்டு முதல்வர் ரங்கசாமி தப்பிக்க நினைக்கிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்ஆர் காங்கிரசும், பாஜகவும் டூபாகூர்தான். சபாநாயகர் செல்வம் வரும் 27ம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து அதிகாரிகளை மாற்றுமாறு கூறியுள்ளாராம். தமிழிசை, ரங்கசாமி, செல்வம் மற்றும் அமைச்சர்களில் யார்? முதல்வர் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை