மொத்தமாக விற்ற டாஸ்மாக்

ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்நாமக்கல், ஜூன் 22: நாமக்கல் மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தனர். மேலும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 12 பேருக்கு அபராதம் விதித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 220 அரசு மதுபானக்கடைகள் செயல்படுகிறது. மதுபானக்கடைகளின் செயல்பாடுகளை வாரந்தோறும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலகண்ணன் தலைமையில், கலால் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வின் போது, அனுமதியற்ற மதுபான பார்கள் நடைபெறுவதை கண்டறியவும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்டறியவும், கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுவகைகள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், சாலையோர கடைகள் மற்றும் தாபாக்களில் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்யப் படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் உள்ள லேபிள்கள் சரிபார்க்கப்பட்டது.

மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்ட கடை எண்.5948 (பரமத்தி வேலூர்), 5952 (பரமத்தி வேலூர்), 5934 (மோகனூர்), 6155 (செங்கப்பள்ளி), 6141 (கபிலர்மலை), 5950 (பரமத்தி வேலூர்), 5951 (பரமத்தி வேலூர்), 6181 (திம்மநாய்க்கன்பட்டி), 6104 (மங்களபுரம்), 6182 (முள்ளுக்குறிச்சி), 6174 (மெட்டாலா) மற்றும் 5941 (செங்கப்பள்ளி) ஆகிய கடைப் பணியாளர்கள் 12 பேருக்கு டாஸ்மாக் நிறுவன விதிகளின்படி ₹70,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த மதுக்கூடத்தினை மாவட்ட மேலாளர் மற்றும் மதுவிலக்கு காவல் துறையினருடன் இணைந்து ஆய்வு செய்த போது, 9 மதுபான பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் மதுபான சில்லரை விற்பனை கடை எண்.6015வுடன் இணைந்த மதுக்கடை அருகே மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த கடையின் விற்பனையாளர் சுந்தரராஜன் என்பவர் கடை திறப்பதற்கு முன்பே கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததை கண்டுபிடிக்கப்பட்டது. 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த ஒழுங்கீனச் செயலுக்காக கடை மேற்பார்வையாளர் சுப்புராஜா மற்றும் விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் பணியாளர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு அருகே அனுமதியின்றி மதுபான பார்கள் இயங்கி வருகிறதா என்பது அதிகாரிகள் கண்காணித்தனர். இதில், அனுமதியின்றி மதுவகைகள் விற்பனை செய்யப்பட்ட இனங்களை கண்டறிந்து 4 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள 18 கடைகள் இன்று முதல் மூடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு தான் மதுபானங்கள் விற்பனை செய்யவேண்டும் என அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்கள், சூபர்வைசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் அனுமதி பெற்ற மதுபான பார்கள், டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகில் செயல்படும் பார்கள் தினமும் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இதை மீறி செயல்படும் மதுபான உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் தற்போது உள்ள அனைத்து மதுபானபார்களும் இரவு 10 மணியுடன் மூடப்படுகிறது. பார்களில் மதுபான பாட்டில்களை அதிக அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்வது, இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் லைசென்சு பெற்ற மதுபானபார்களும் இரவு 11 மணியுடன் மூடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தினமும் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்