மேலூரில் மே 30ல் கேரளா அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

மேலூர், மே 28: முல்லை பெரியாறு அணையில் கேரளா அரசு புதிய அணை கட்டுவதை கண்டித்து மேலூரில் மே 30ல் விவசாயிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. மேலூரில் முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சங்க தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளின் ஆலோசனை நடைபெற்றது.

அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கேரளா அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக, சட்ட விரோதமாக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசை கண்டித்தும், அந்த அரசின் நடவடிக்கைகளுக்கு தடை போட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும்,

இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சட்ட போராட்டங்களை நடத்த தமிழக அரசை வலியுறுத்தியும், வரும் மே 30ல் விவசாயிகள் சார்பில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில் விவசாய சங்க செயலார் ரவி, பொருளாளர் ஜெயபால், குறிஞ்சிகுமரன், இளங்கோ, மாயழகு, மனோகரன் உட்பட ஏராளமான விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு