மேலும் சில நாட்களுக்கு தாவரவியல் பூங்கா மாடத்தில் மலர் அலங்காரம் வைக்க முடிவு

ஊட்டி :  ஆண்டு தோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இம்முறை கடந்த 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது. மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பல லட்சம் கார்னேசன் மலர்களால் கோவை வேளாண் பல்கலைக்கழகம், பழங்குடியினர் உருவ பொம்மைகள், ஊட்டி 200, 124வது மலர் கண்காட்சி உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இது தவிர நுழைவு வாயிலில் 10 அலங்கார வளைவுகள், செல்பி ஸ்பாட்டுகள், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர்களை கொண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு வாரமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், வேளாண் பல்கலைக்கழகம், ஊட்டி 200, பழங்குடியினர் உருவ பொம்கைள் மற்றும் அலங்கார வளைவுகளில் வைக்கப்பட்டிருந்த மலர்கள் வாடின. மேலும், அழுகி உதிர துவங்கின.இதனை தொடர்ந்து, இந்த மலர் அலங்காரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதேசமயம் மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு லில்லியம், மேரிகோல்டு உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு மாடங்களில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த வாரம் இறுதி வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது….

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்