மேலகடம்பன்குளம் மக்கள் உண்ணாவிரதம்

பணகுடி : பணகுடி அருகே உள்ள மேலகடம்பன்குளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்குள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு  சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து குடியிருப்புகள் கட்டி வசித்து வருவதுடன், விளைநிலங்களாகவும் பயன்படுத்தி வந்தனர். இதற்காக திருவாவடுதுறை மடத்தின் சார்பில் விதிக்கப்பட்டிருந்த தீர்வையை செலுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடம்பன்குளம் பொதுமக்கள், தீர்வையை செலுத்த சென்றபோது மடத்தின் சார்பில் தீர்வை தொகை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் அதன்படி தீர்வை கட்டணத்தை செலுத்த வேண்டுமென கூறியதாக தெரிகிறது. மேலும் புதிய தீர்வை தொகையை கட்டத் தவறினால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென கூறி திருவாவடுதுறை ஆதீன மடத்தை கண்டித்து ஒன்று திரண்ட கிராம மக்கள், கடந்த 9ம் தேதி முதல் மேலகடம்பன்குளம் அய்யா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சாமிதோப்பு தலைமை பதி குரு பாலஜனாதிபதி நேரில் வந்து மேலகடம்பன்குளம் கிராம மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனிடையே தகவலறிந்த வள்ளியூர் பொறுப்பு டிஎஸ்பி உதயசூரியன், துணை தாசில்தார் பேட்டரிக், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜா, எஸ்ஐ மகேந்திரன், மதுரை திருவாவடுதுறை ஆதீன ஆய்வாளர் நாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தீர்வை தொகையையே வசூலிப்பது, தீர்வை தொகை உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. இதையேற்று தொடர் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்