மேற்கு தொடர்ச்சி மலையில் மழை; கொடைக்கானல், கும்பக்கரை அருவிகளுக்கு நீர்வரத்து: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் / பெரியகுளம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் கொடைக்கானல், கும்பக்கரை அருவிகளில் தண்ணீர் கொட்ட துவங்கியது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை சீசன் காலம் ஆகும். இந்த காலங்களில் சமவெளி பகுதியில் அடிக்கும் வெயிலை தணிக்க கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிய துவங்குவர். வார விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்தனர். மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கொடைக்கானலில் மழை பெய்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பரவலாக கொட்டுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் அருவி முன்பு செல்பி எடுத்து கொண்டனர். கொடைக்கானலில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால், சுட்டெரித்த வெயில் மாறி குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால், அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.கடந்த இரண்டு மாதமாக போதிய மழை இல்லாததால், அருவியில் நீர்வரத்து மிகவும் குறைந்திருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த 2 நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், அருவியில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதனால், விடுமுறை தினமான நேற்று அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பெரியாறு நீர்வரத்து 2வது நாளாக உயர்வுகூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், பெரியாறு அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 7ம் தேதி வினாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 225 கனஅடியாகவும், நேற்று 350 கனஅடியாகவும் உயர்ந்தது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 125.15 அடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் இருப்புநீர் 3,650 மில்லியன் கனஅடி.71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடி. நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 5,446 மில்லியன் கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 75.11 அடி. நீர்வரத்தும், வெளியேற்றமும் வினாடிக்கு 3 கனஅடி. இருப்பு நீர் 34.47 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.90 அடி. நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை.  இருப்பு நீர் 114.18 மில்லியன் கனஅடி. மழையளவு: பெரியாறு – 43.6 மிமீ, தேக்கடி –  30 மிமீ, கூடலூர் –  3.8 மிமீ, உத்தமபாளையம் –  12 மிமீ….

Related posts

கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

லால்குடி அருகே பெண் தெய்வ கற்சிலை கண்டெடுப்பு