மேட்டூரில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு

தஞ்சாவூர், ஜூலை 29: மேட்டூர் அணை நீர்மட்டம் 71வது முறையாக 100 அடியை எட்டியதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீரை கூடுதலாக திறந்து விட்டு அந்த தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடப்பாண்டில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு வழக்கமான நாளான ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிய நீரை கர்நாடகா அரசு தராததே காரணம். கர்நாடகா அரசின் வஞ்சிக்கும் போக்கால் அப்போது மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆற்றுநீரை பயன்படுத்தும் விவசாயிகளால் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியவில்லை. எனவே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி உரிய நீரை தமிழகத்திற்கு தரக்கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டுள்ளது. இதனால் நீர்வரத்து அதிகமானதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. நேற்றுமுன்தினம் மதிய நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

இதே அளவில் நீர்வரத்து இருக்குமானால் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி பாசனம் பெறும் மாவட்ட மக்கள் விழாவை கொண்டாடும் வகையில், ஒரு வாரம் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணை வரலாற்றில் தற்போது 71வது முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து டெல்டா விவசாயிகள் கூறும்போது,
மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது தண்ணீர் திறந்தால் சம்பா சாகுபடிக்கான தொடக்க பணிகள் மேற்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக இருக்கும் நிலையில் இப்போது அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தால் வறண்டு போய் கிடக்கும் ஏரி, குளங்களை நிரப்பிக் கொள்ள முடியும்.

அவ்வாறு ஏரி குளங்கள் நிரம்ப தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு போய் கிடக்கிறது. மேட்டூர் அணையில் முழுவதுமாக நிரம்பி உபரி நீரை திறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்நீர் வீணாக கடலில் போய் சேரும் என்பதை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இப்போதே தண்ணீரை கூடுதலாக திறந்து விட்டு அந்த தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும் . ஆடு மாடுகளுக்கு கூட தண்ணீர் தேவை என்பதை புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து