மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கொல்கத்தாவுக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார்: பிரிவு உபச்சார விழாவை புறக்கணித்தார்

சென்னை: மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி குடும்பத்துடன் நேற்று காலை சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை  நீதிபதியாக கடந்த ஜனவரி 4ம் தேதி பதவியேற்ற சஞ்சீப் பானர்ஜி கடந்த 10  மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் ஏராளமான முக்கிய வழக்குகளை விசாரித்து  தீர்ப்பளித்துள்ளார். அரசு நில ஆக்கிரமிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு  உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக  கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவர், படுக்கைகள்  உள்ளிட்ட வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அப்போதைய தமிழக  அரசுக்கு உத்தரவாக பிறப்பித்தவர். நீட் தேர்வை ரத்து செய்வது  தொடர்பாக  மாணவர்களிடம் கருத்து கேட்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தை எதிர்த்து பாஜ மாநில நிர்வாகி  கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற  கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல்  அளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ‘சார்டர்ட் ஐகோர்ட்’ என்ற பெருமை கொண்ட பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. அப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து 3  நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்சீப் பானர்ஜியை  மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும்  அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற  கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். அதே போல இந்தியாவின்  பழமைவாய்ந்த வழக்கறிஞர் சங்கங்களுள் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷன்  சார்பில் 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு சஞ்சீப்  பானர்ஜியின் இடமாற்ற உத்தரவை மறு பரீசிலனை செய்யக் கோரி கடிதம் எழுதியதோடு  சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சஞ்சீப்  பானர்ஜியின் இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டி  உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.கடந்த சில  தினங்களாக சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்றம் வக்கீல்கள் மற்றும் அரசியல் கட்சி  பிரமுகர்களிடையே பேசுபொருளாக இருந்த நிலையில் ஜனாதிபதி ஒப்புதலையடுத்து  அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு செய்தார். இந்நிலையில்  பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு நேற்று காலையில் 9.30 மணியளவில்  சாலை மார்க்கமாக தனது காரில் சொந்த ஊரான கொல்கொத்தா புறப்பட்டு சென்றார்.  அங்கிருந்து மேகாலயா செல்வதாக கூறப்படுகிறது. அவர் கொல்கத்தாவிலிருந்து  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க வரும்போதும் காரிலேயே வந்தது குறிப்பிடத்தக்கது.
அழகான மாநிலம் தமிழகம்: சஞ்சீப் பானர்ஜி உருக்கம்சென்னையிலிருந்து
புறப்படுவதற்கு முன்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வக்கீல்களுக்கு
சஞ்சீப் பானர்ஜி எழுதிய கடிதத்தில், ‘‘தனிப்பட்ட முறையில் விடைபெறாமல்
செல்வதற்காக மன்னிக்க வேண்டும். சக நீதிபதிகளின் அளவு கடந்த அன்பினால்
பூரித்து போயுள்ளேன். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான்
சிறப்பானவர்கள். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த உயர்
நீதிமன்ற பதிவுத்துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்காக நீண்ட நேரம்
காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி. இதுநாள் வரை அவர்கள்
ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அதை என்னால் முழுமையாக
தகர்த்தெறிய இயலவில்லை. இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும்
நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக்
கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே அனைவரிடமிருந்தும் விடைபெறுகிறேன்”  என்று
கூறியுள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு