மேகதாது குறித்து விவாதிக்க தடைகோரிய தமிழக அரசு மனு மீது வரும் 19ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை வரும் 19ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் மேகதாது குறித்து காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்க ஆணையத்தின் தலைவர் அனுமதி வழங்குவதாக கடந்த மாதம் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 7ம் தேதி ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து ஆலோசிப்பது, உச்ச நீதிமன்ற முந்தைய தீர்ப்புக்கு எதிரானது. அதே நேரத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. குறிப்பாக இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் இடையே முறையாக காவிரி நீர் பங்கீடு செய்வதற்கு மட்டுமே ஆகும். அதனால் மேகதாது குறித்து ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்க தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜராகி, மேகதாது குறித்து விவாதிக்க தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வலியுறுத்தினர். இதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் 19ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.* கர்நாடகா கோரிக்கை நிராகரிப்புஇதற்கிடையே, மேகதாது குறித்து காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிப்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என கர்நாடகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்….

Related posts

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 ஐபிஎஸ் அதிகாரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

எமர்ஜென்சியை அமல்படுத்திய ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பால் சர்ச்சை