Sunday, October 6, 2024
Home » மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது ஒன்றிய அரசிடம் நேரில் முறையிட முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது ஒன்றிய அரசிடம் நேரில் முறையிட முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

by kannappan

சென்னை: கர்நாடக அரசு, மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் நேரில் சென்று வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு  செய்யப்பட்டது. கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையை கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரை கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.  இதுகுறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக, நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  மற்றும் ஆர்.எஸ்.பாரதி, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் (அதிமுக), கே.எஸ்.அழகிரி,  செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி (பாஜ), ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (பாமக), பூமிநாதன், சின்னப்பா (மதிமக), தொல்.திருமாவளவன், ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), கே.பாலகிருஷ்ணன், பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), இரா.முத்தரசன், நா.பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்),  ஜவாஹிருல்லா, அப்துல் சமது (மமக),  வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி),  ஈஸ்வரன், எஸ்.சூரியமூர்த்தி (கொமதேக),  பூவை ஜெகன் மூர்த்தி, இ.குட்டி (புரட்சி பாரதம்) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார்.  இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்னையான காவிரி உரிமையை காப்பாற்றுவதற்காக அனைத்து சட்டமன்றக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம். மிகமிக முக்கியமான பிரச்னை தொடர்பாக நாம் அவசரமாக கூடி இருக்கிறோம். நாம் அனைவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்னையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும்.  அது எந்தளவு உண்மையோ, அந்த அளவுக்கு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரே சிந்தனையோடு இருக்கின்றன என்பதை நாம் கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும் உணர்த்தியாக வேண்டும். அதற்காகத்தான் நாம் இங்குக் கூடியிருக்கிறோம்.அண்ணாவின் மறைவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர் “காவிரி பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு 5.9.1969ல் கடிதம் எழுதியவர். நடுவர் மன்றம் அமைக்க முதன் முதலில் 17.2.1970-ல் கோரிக்கை விடுத்தவர். 2.6.1990 அன்று நடுவர் மன்றம் அமைய, காரணமாக இருந்தவர். 20.7.1990-ல் அதன் முதல் விசாரணை நடைபெற்றது. அந்த நடுவர் மன்றத்திற்கு “இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு” என்ற உத்தரவினை உச்ச நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 11.8.1998 அன்று வரைவுத் திட்டம் உருவாக்கி, அதற்கு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் முதலமைச்சர்கள் இடம்பெற்ற காவிரி நதி நீர் வாரியம் அமைய பாடுபட்டவர். காவிரி நடுவர் மன்ற விசாரணையை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து 5.2.2007 அன்று நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பெற்றதும் கலைஞர் தலைமையிலான கழக அரசுதான்.  உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் “காவிரி உரிமை மீட்பு பயணம்” மேற்கொண்டு, இப்போது நம்மிடம் உள்ள காவிரி வரைவு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது அடியேன் என்பதை இங்கு அமர்ந்திருப்பவர்கள் அறிவீர்கள். இவை இதுவரை நடந்தவை. இன்று மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது மேகதாது அணை. காவிரியின் குறுக்கே நமது மாநில எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் மேகதாது அணையை கட்ட, கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதனை நாம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து தடுத்தாக வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நலன் மோசமான நிலைமையை அடையும். இந்த அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கர்நாடகம் சொல்லி வருகிறது. இதில் துளியளவும் உண்மை இல்லை. தமிழ்நாடு முழுமையாக பாதிக்கப்படும்.  மேகதாதுவில் அணை அமைக்கப்பட்டால் நமக்கு கிடைத்துவரும் நீர் அனைத்தும் இந்த புதிய அணையில் தேக்கி வைக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பயன்படுத்தியது போக எஞ்சிய நீர் மட்டுமே நமக்கு வழங்கப்படும் நிலைதான் உண்மையாக ஏற்படும். இதை கருத்தில்கொண்டுதான் பல ஆண்டுகளாக இந்த இடத்தில் அணை கட்டுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக நாம் பல போராட்டங்களையும், முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு 17.6.2021 அன்று பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டின் பல முக்கிய கோரிக்கைகள் குறித்த மனுவை நான் அளித்தேன். அப்போது, அவற்றில் முக்கிய பிரச்னையாக மேகதாது அணை குறித்து விளக்கி, கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை கைவிட அறிவுறுத்தும்படி, பிரதமரை கேட்டுக்கொண்டேன். இதைத்தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் கடந்த 3ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில், மேகதாது திட்டம், பெங்களூரு பெருநகரத்தின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், நீர்மின் உற்பத்திக்காகவும்தான் எனவும், தமிழ்நாட்டின் பவானி ஆற்றில் துணைப்படுகையில் உள்ள குந்தா மற்றும் சில்ஹல்லா நீர்மின் திட்டங்களை மேற்கோள் காட்டி, மேகதாது திட்டத்தை பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலாக, கடந்த 4ம் தேதி, நான் அனுப்பிய கடிதத்தில், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினியின் கீழ் உள்ள கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் வரும் தண்ணீருக்கு, மேகதாது திட்டம் தடையாக இருக்கும் என்றும், அது தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களை வெகுவாக பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, இத்திட்டத்தை தமிழ்நாடு எக்காலத்திலும் ஏற்க இயலாது என்று உறுதிபட தெரிவித்தேன்.இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், கடந்த 6ம் தேதி ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்தித்து, மேகதாது திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு கோரினார். ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர், தமிழ்நாட்டை கலந்தாலோசிக்காமல், கர்நாடகாவின் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காது என்று அப்போது உறுதியளித்தார். இந்த சூழலில், இந்த அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் இணைந்து மேற்கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானங்களை இந்த கூட்டத்திலே ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும். இந்த தீர்மானங்களை அனைத்துக்கட்சி குழுவாக சென்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். பின்னர், இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் 3 முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. * உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்திற்கு, ஒன்றிய அரசு அனுமதி வழங்க கூடாது.* அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்  மாநிலத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.* கூட்டத் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று வழங்குவார்கள். அதன்பிறகு, சட்டபூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்1. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது.  அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும்.  எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்க கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்வது. 2. இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும். 3. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிறைவுரை ஆற்றினார். பொதுப்பணி துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நன்றி கூறினார்….

You may also like

Leave a Comment

16 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi