மூதாட்டி கொலை வழக்கில் ஜார்கண்ட் வாலிபர் கைது : திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

அம்பத்தூர்: அம்பத்தூர் – அயப்பாக்கம் நெடுஞ்சாலை டி.ஜி.அண்ணா நகரை சேர்ந்தவர் சரத்சந்திரன்(70). இவரது மனைவி நிர்மலா(64). இவர்களது வீட்டின் அருகே மகன் சந்தோஷ்ராஜ் (30), தனது மனைவி பிரேமலதாவுடன் வசிக்கிறார். கடந்த 14ம் தேதி இரவு நிர்மலா வீட்டில் கட்டிலில் கொலை செய்யப்பட்டுகிடந்தார்.   புகாரின்படி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை  ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு ஒரு வாலிபர், நிர்மலா வீட்டிற்கு சென்று கைப்பையை எடுத்து வருவது தெரியவந்தது. மேலும், போலீசார் நிர்மலா வீட்டை சோதனை செய்தனர். அப்போது, அங்கிருந்து செல்போன், கைப்பை, நெத்திச்சுட்டி ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனையில்,  அவரது பாக்கெட்டில் நிர்மலாவின் செல்போன் இருந்தது.  இதனையடுத்து, போலீசார் அவரை அம்பத்தூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில்,  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிராம் டுடூ (29). பி.எஸ்.சி படித்துள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தார். பின்னர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஒரு வீட்டில் சக வடமாநில தொழிலாளர்களுடன் வாடகைக்கு தங்கி இருந்தார். சம்பவத்தன்று நள்ளிரவு பிராம் டுடூ குடிபோதையில் ஊரை சுற்றியுள்ளார். அப்போது டி.ஜி.அண்ணா நகருக்கு வந்தபோது  சரியாக பூட்டாமல் இருந்த நிர்மலா வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து செல்போன், நெற்றி சுட்டி, கைப்பை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு வெளியேற முயன்றுள்ளார். இதைப்பார்த்த நிர்மலா அவரை தடுத்து சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பிராம் டுடூ அங்கு கிடந்த ரீப்பர் கட்டையை எடுத்து நிர்மலாவின் தலை மற்றும் நெற்றியில் தாக்கி கொலை செய்து கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பிராம் டுடூவை நேற்று மதியம் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில், கொலையாளிகளை பிடித்த இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படை போலீசாரை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி வெகுமதி அளித்தார்.   …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை