மூதாட்டியிடம் செயின் பறித்த வடலூர் வாலிபர்கள் கோலம் போடும் பெண்களிடம் திருடும் பலே திருடன் கைது செயின், பைக், செல்போன் பறிமுதல்

வில்லியனூர், ஜன. 20: நெட்டப்பாக்கம் அருகே உள்ள கல்மண்டபம் பாண்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (85). இவர் கடந்த மாதம் 31ம் தேதி காலை வீட்டு வாசலில் உள்ள கேட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவன் இறங்கி, முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். உடனே முத்துலட்சுமி தங்க சங்கிலியை பிடித்துக்கொண்டார். இதனால் பாதி செயினுடன் அவன் மற்றும் கூட்டாளியுடன் கண் இமைக்கும் நேரத்தில் தலைமறைவாகிவிட்டான். அவர் பறித்து சென்ற தங்க சங்கிலியின் மதிப்பு 2.5 பவுனாகும்.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. வம்சிதரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 31ம் தேதி கல்மண்டபத்தில் மூதாட்டியிடம் 2 மர்ம நபர்கள் செயின் திருட்டில் ஈடுபட்டனர். இவர்களை பிடிக்க கிரைம் போலீசார் ஏட்டு வரதராஜபெருமாள் தலைமையில் ராஜரத்தினம், பிரபு, ரங்கராஜ் ஆகிய காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் சாலையோரம் இருந்த சிசிடிவி கேமரா என 80க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது அதில் பதிவான உருவம் தமிழகத்தில் பிரபல பலே செயின் திருடன் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் வடலூரை சேர்ந்த கவுதம் (35), சண்முகம் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிரைம் போலீசார், அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வடலூரில் கவுதம் பதுங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தமிழகத்தின் டெல்டா கிரைம் போலீசார் உதவியுடன் அவரது வீட்டுக்கு சென்று கவுதமை கிரைம் போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 2.5 பவுன் செயின், ஒரு பைக், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவரை புதுச்சேரி அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள கூட்டாளி சண்முகத்தை போலீசார் தேடி வருகின்றனர். கவுதம் மீது தமிழகத்தில் 13 செயின் திருட்டு, 4 குண்டாஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பெரும்பாலும் காலையில் ஆள் நடமாட்டம் இல்லாத போதும், பெண்கள் கோலம் போட வெளியே வரும்போது அவர்களை குறிவைத்து செயின் திருட்டில் ஈடுபடுவது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை