மூணாறில் வாட்டி வதைக்கும் வெயிலால் கருகும் நறுமண பயிர்கள்

மூணாறு, ஏப்.14: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஏராளமானோர் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் நறுமணப் பொருட்களின் உறைவிடமாக விளங்குகிறது. இடுக்கி மாவட்டம். இந்தியாவின் 70 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில் விளைகிறது. சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இதற்கான விவசாயம் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் ஏலக்காய், குறுமிளகு, கிராம்பு, காப்பி, தேயிலை போன்ற நறுமண பொருட்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் வரலாறு காணாத வெயிலின் தாக்கத்தாலும் கோடை மழை பொய்த்ததாலும் ஏலம் உள்பட உள்ள விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகின்றன. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்தது என்றாலும் போதிய அளவு மழை கிடைக்கவில்லை. இதனால் ஏலக்காய் உற்பத்தி குறைவு காரணமாக பல விவசாயிகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறிய அளவில் ஏலக்காய் தோட்டம் வைத்திருப்பவர்கள் கடனில் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பெரும்பாலான தோட்டங்களில் வேலையில்லாத காரணத்தாலும் தேர்தலில் வாக்குப்பதிவுக்காக செல்வதாலும் வெளிமாநில தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் பெரிய அளவிலான தோட்டம் உரிமையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் ஏலக்காய், குறுமிளகு உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு போதிய விலை கிடைக்காதது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை