Saturday, September 21, 2024
Home » மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை இன்று பதவியேற்பு 33 பேருக்கு அமைச்சர் பதவி: இலாகா விவரங்கள் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை இன்று பதவியேற்பு 33 பேருக்கு அமைச்சர் பதவி: இலாகா விவரங்கள் அறிவிப்பு

by kannappan

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், 33 பேர் அமைச்சர்களாகவும் இன்று காலை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பதவி ஏற்கின்றனர். புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர். இதுதவிர கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று முன்தினம் 5ம் தேதி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை கவர்னரிடம் அவர் வழங்கினார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பதற்கான கடிதத்தை தமிழக கவர்னர் 5ம் தேதி வழங்கினார். இந்நிலையில், தமிழகத்தில் புதிய அமைச்சரவை குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்திய, மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவது குறித்த பட்டியலை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்ட கவர்னர் மாளிகை நேற்று மாலையில் புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, பொன்முடி, மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (கடலூர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (விருதுநகர் தெற்கு), தங்கம் தென்னரசு (விருதுநகர் வடக்கு), ரகுபதி (புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்), முத்துசாமி (ஈரோடு), பெரிய கருப்பன் (சிவகங்கை), தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு), மு.பெ.சாமிநாதன் (திருப்பூர்), கீதா ஜீவன் (தூத்துக்குடி வடக்கு), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி தெற்கு) மற்றும் ராஜகண்ணப்பன், சக்கரபாணி (திண்டுக்கல்), செந்தில்பாலாஜி (கரூர்), ஆர்.காந்தி (வேலூர்), மா.சுப்பிரமணியன் (தென் சென்னை மேற்கு), பி.மூர்த்தி (மதுரை), எஸ்.எஸ்.சிவசங்கர் (பெரம்பலூர்), பி.கே.சேகர்பாபு (வடசென்னை கிழக்கு), பழனிவேல் தியாகராஜன், ஆவடி சா.மு.நாசர் (திருவள்ளூர் வடக்கு), செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருச்சி தெற்கு), சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன் (கடலூர் மேற்கு), மனோ தங்கராஜ் (கன்னியாகுமரி), மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர்.அதில், சென்னை 3, கடலூர் 2, திண்டுக்கல் 2, திருச்சி 2, திருப்பூர் 2, தூத்துக்குடி 2, மதுரை 2, விருதுநகர் 2, விழுப்புரம் 2, புதுக்கோட்டை 2, ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 23 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், 34 பேருக்கான இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெண்கள் நலன், மீனவர் நலனுக்காக தனியாக துறை ஒதுக்கப்பட்டு, துறையின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 19 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். 15 புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த புதிய அமைச்சரவையில் கலைஞர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மு.க.ஸ்டாலின் உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவையில் அனுபவமும், இளமையும் கலந்த பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பெண்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அமைச்சரவை தமிழக மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் எளிய விழாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், முக்கிய உயர் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைக்கான அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர்.* 15 புதுமுகங்கள்சக்கரபாணி (உணவுத்துறை), ஆர்.காந்தி (ஜவுளித்துறை), மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை), பி.மூர்த்தி (வணிகவரித்துறை), எஸ்.எஸ்.சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), பி.கே.சேகர்பாபு (இந்து அறநிலையத்துறை), பழனிவேல் தியாகராஜன் (நிதித்துறை), ஆவடி சா.மு.நாசர் (பால்வளத்துறை), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மை நலத்துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வி துறை), சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை), சி.வி.கணேசன் (தொழிலாளர் நலத்துறை), தா.மனோ தங்கராஜ் (தகவல் தொடர்பு துறை), மா.மதிவேந்தன் (சுற்றுலா துறை), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) உள்ளிட்ட 15 பேர் தற்போது புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.* 19 பேர் பழைய அமைச்சர்கள்மு.க.ஸ்டாலின் (முதலமைச்சர்), துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்), கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சி துறை), இ.பெரியசாமி (கூட்டுறவு துறை), க.பொன்முடி (உயர் கல்வி துறை), எ.வ.வேலு (பொதுப்பணித்துறை), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை துறை), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (வருவாய் துறை), தங்கம் தென்னரசு (தொழில் துறை), எஸ்.ரகுபதி (சட்டத்துறை), சு.முத்துசாமி (வீட்டுவசதி துறை), கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி துறை), தா.மோ.அன்பரசன் (ஊரக தொழில் துறை), மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை அமைச்சர்), கீதா ஜீவன் (சமூகநலத்துறை), அனிதா ராதாகிருஷ்ணன் (மீன்வளத்துறை), ராஜகண்ணப்பன் (போக்குவரத்து துறை), கா.ராமச்சந்திரன் (வனத்துறை), செந்தில்பாலாஜி (மின்சார துறை) உள்ளிட்ட 19 பேர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள்.* மாலையில் அமைச்சரவைக் கூட்டம்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கோட்டையில் நடக்கிறது. கொரோனா தொற்று உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், புதிய அமைச்சரவை பதவி ஏற்பு மற்றும் அமைச்சரவைக் கூட்டம் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நேற்று இரவு, மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்….

You may also like

Leave a Comment

three × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi