முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு: தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ் வசதி

சென்னை: முழு ஊரடங்கு நேரத்தில் சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. 2021ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 712 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 10ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். அக்டோபர் 29ம் தேதி முதல் நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 9,214 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 400 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு 5 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது.  மெயின் தேர்வு கடந்த 7ம் தேதி தொடங்கியது. 7ம் தேதி காலையில் முதல் தாள் தேர்வு நடந்தது. 8ம் தேதி காலையில் இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) நடந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பாதிப்பு அடையாத வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை காண்பித்து தேர்வு எழுதும் மையங்களுக்கு கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் வாகனம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத மாணவர்களுக்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்கள் வரை இயக்கப்பட்டது. மேலும் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வகையிலும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு உணவு, உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக தேர்வு எழுதினர். தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம்  பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் தேர்வு கூடங்களுக்குள் செல்ல  அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து வருகிற 15ம் தேதி காலையில் இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. கடைசி நாளான 16ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் தாம்பரம் ரயில் நிலைய வளாகம் ₹1000 ேகாடியில் மறுசீரமைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

மெட்ரோ ரயில் பணி காரணமாக 2 நாட்கள் மடிப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு