முல்லை பெரியாறு விவகாரத்தில் முதல்வர் உத்தரவு: நடிகர் பிரித்விராஜ் மீது வழக்கு பாயுமா?: கேரளாவில் பெரும் பரபரப்பு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை இடியும் ஆபத்து இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் கூறியதையடுத்து, பிரபல மலையாள நடிகர்கள் பிரித்விராஜ், உன்னிமுகுந்தன் ஆகியோர் மீது வழக்கு பாயுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கனமழையை தொடர்ந்து முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை நெருங்கியிருக்கிறது. வழக்கமாக அணையின் நீர்மட்டம் உயரும்போது அணை இடிந்து விழும் ஆபத்து இருப்பதாக, கேரளாவில் சில அமைப்புகள் மக்களிடையே பீதியை பரப்புவதுண்டு. அதே போல் இந்த முறையும் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தனர். இதற்கு சிலர் ஆதரவும் தெரிவித்தனர். மலையாள முன்னணி நடிகர்களான பிரித்விராஜ், உன்னி முகுந்தன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டனர். நடிகர் பிரித்விராஜ் கூறுகையில், 145 வருடங்களுக்கு மேலான முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஆட்சியாளர்கள் இதுதொடபர்பாக உரிய முடிவு எடுப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதுரை, கம்பம், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், பிரித்விராஜை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கேரள சட்டசபையிலும் எதிரொலித்து. சமூக வலைதளங்களில் பீதியை கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் எம்எல்ஏ எம்.எம்.மணி கூறினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், முல்லை பெரியாறு குறித்து சமூக வலைதளங்களில் பீதி ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதற்கிடையே கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், தனது டூவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். அதில், நடிகர் பிரித்விராஜ் போன்ற பிரபலங்கள், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்க கூடாது. மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக கேரள போலீசார் இதுவரை யார் மீதும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பதால், நடிகர்கள் பிரித்விராஜ், உன்னி முகுந்தன் உள்பட பீதியை பரப்பிய அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது….

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை