முற்றுப்புள்ளி தேவை

சமீபகாலமாக, இந்திய எல்லையில் சீனா அவ்வப்போது அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் திறம்பட செயல்பட்டு வருவதால், சீனாவின் எண்ணம் பலிக்கவில்லை. இந்திய எல்லையில் சீனா தொந்தரவு செய்வதன் நோக்கம் என்ன?. எல்லையில் தொந்தரவு தருவது மூலம் சீனா சொல்லும் செய்தி என்ன?. போருக்கான சூழலை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்காவுடன் இந்தியா நல்ல நட்பில் இருப்பது சீனாவுக்கு பிடிக்கவில்லையா?. இதனாலேயே எல்லையில் சீனா வாலாட்ட துவங்கியுள்ளதா? இனி, அச்சுறுத்தி எந்த ஒரு நாட்டையும் வல்லரசு நாடுகள் வெற்றி பெற முடியாது என்பதை சீனா அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும், எல்லையில் சீனாவுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.நவீன ஆயுதங்கள், போர் விமானம் மற்றும் ராணுவ வீரர்கள் ஆகியவை மூலம் மட்டுமே போரில் வெற்றி பெற முடியாது என்பதற்கு உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போர் மிக சிறந்த சான்று. சீன ராணுவ வீரர்கள் பெரிய அளவிலான போர்க்களம் கண்டது இல்லை. ஆனால், இந்தியாவிடம் போர்க்களத்தில் பயிற்சி பெற்ற போர் விமானம், வலிமை மிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். முக்கியமாக, மலைகளில் போரிட பயிற்சி பெற்ற வீரர்களும் இந்தியாவிடம் உள்ளனர். வலிமை வாய்ந்த நமது ராணுவ வீரர்களிடம், மோதி வெற்றி பெற முடியாது என்பது தெரிந்தும், சீனா வாலாட்டி வருவது தான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லையில் பதற்றமான சூழலை உருவாக்க சீனா முயற்சிக்கிறது. இதன் மூலம் எல்லையிலேயே இந்தியாவின் முழுக்கவனம் இருக்கும். இதனால் பொருளாதாரம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்த முடியாது என சீனா எண்ணுகிறது.முக்கியமாக, இந்தியா- சீனா இடையே பதற்றமான நிலை நீடித்தால், பிற நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க தயக்கம் காட்டும் என சீனா கணக்கு போடுகிறது. இதனாலேயே எல்லையில் சீனா அடிக்கடி தொல்லை கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. எல்லைகளில் நவீன கட்டமைப்பை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். படைகளை எளிதாகவும், விரைவாகவும் கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான வேலையில் ஒன்றிய அரசு இறங்க வேண்டும். சீனா எப்போதும் நட்பு நாடாக இருக்கப் போவதில்லை என்பதால், சீனாவை நேரிடையாக ஒன்றிய அரசு எதிர்க்க வேண்டும்.எல்லை பகுதிகளில் அதிநவீன கட்டமைப்பை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், அருணாச்சல பிரதேச எல்லையில் என்ன நடக்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது.முக்கியமாக, எல்லை பிரச்னையில் வெளிப்படையாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால், அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்கலாம். தீவிரவாதிகள் ஊடுருவ முடியாத வகையில், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் எல்லைகளை மேம்படுத்த வேண்டியது கட்டாயம். சீனாவின் பேச்சை ஒருபோதும் நம்ப வேண்டாம். சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளை மறைமுகமாக தூண்டி விட்டு நெருக்கடி தர வைக்க வேண்டும். சீனாவை எதிர்க்கும் நாடுகளுக்கு ஒன்றிய அரசு நேரிடையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். எல்லையில், அத்துமீறும் சீனாவின் நடவடிக்கைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில், போர் தந்திரம் மற்றும் யுத்திகளை ஒன்றிய அரசு கையாள வேண்டியது அவசியம்….

Related posts

ஆருயிர் காப்போம்

இங்கிலாந்தில் இந்தியா

அடுத்த அசத்தல்