மும்பையில் டவ்தே புயலால் கவிழ்ந்த படகு ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் 49 பேர் கடலில் சடலமாக மீட்பு: மாயமான 37 பேரை தேடும் பணி தீவிரம்

மும்பை: டவ்தே புயலால் மும்பை அருகே கடலில் ஓஎன்ஜிசி நிறுவன பணிக்காக ஊழியர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த படகு மூழ்கியதால், இறந்தவர்கள் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. மாயமான 37 பேரை தேடும் பணி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனம் முன்னெச்சரிக்கையாக செயல்படாததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று குஜராத்தில் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் கரையை கடந்தது. இதனால், மகாராஷ்டிராவில் கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்தன. மும்பையில் இருந்து 70  நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் நடுக்கடலில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறு உள்ளது. இந்த எண்ணெய் கிணறு அருகே புதிய எண்ணெய் கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்களும் அதிகாரிகளும்  ஈடுபட்டனர். அவர்கள் நங்கூரமிடப்பட்ட பார்ஜ் படகில் நின்றபடி வேலை பார்த்தனர். பி305 பதிவு எண் கொண்ட அந்த படகில் மொத்தம் 273 பேர் இருந்தனர். டவ்தே புயலில் இந்த படகு நங்கூரத்துடன் வெகுதூரம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உடைந்து கவிழ்ந்தது. நடுக்கடலில் உயிருக்கு போராடிய ஊழியர்களை மீட்க  உடனடியாக கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் விரைந்தன.  கடந்த 3 நாட்களாக நடந்த மீட்புப் பணியில் 186 பேர் மீட்கப்பட்டனர். 22 பேர் சடலமாக கடலில் கண்டெடுக்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று, இறந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்ததாகவும்,  37 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக கடற்படை அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே, ஓஎன்ஜிசியின் அலட்சியம்தான் இந்த உயிர்ப்பலிகளுக்கும், தொழிலாளர்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டதற்கும் காரணம் என மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதை ஒரு படுகொலையாக கருத வேண்டும்  என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘படகு கவிழ்ந்து 37 ஊழியர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டனர் என்ற செய்தி நிலைகுலைய வைத்துள்ளது. 38க்கும் மேற்பட்டோர்  இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது இயற்கையால் ஏற்பட்டதல்ல, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சோக சம்பவம். எச்சரிக்கையை முன்கூட்டியை செய்திருக்க வேண்டும். எண்ணெய் நிறுவனத்தின் இந்த தவறுக்கு மத்திய பெட்ரோலிய துறை  அமைச்சர் தர்மேந்திரபிரதான் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். மோடி அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையால்தான் பல லட்சம் மக்கள் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களது மோசமான தவறுகளில் இருந்து மோடி அரசு  எப்போதுதான் பாடம் கற்கப்போகிறது?’’ என தெரிவித்துள்ளார்….

Related posts

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

பா.ஜ அமைச்சரின் காரை தடுத்ததாக நடிகர் கைது: கோவா போலீசார் அதிரடி

கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்