முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு: பிரபல ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக 2 பேரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 41வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் இனியன் (41), மினிவேன் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வியாசர்பாடி நேரு நகர் 2வது தெருவில் உட்கார்ந்து தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வியாசர்பாடி நேரு நகர் 3வது தெருவை சேர்ந்த அஜய் (எ) கருவாடு அஜய் (19) மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து இனியனிடம் தகராறு செய்துள்ளனர்.அப்போது, அஜய் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இனியனை வெட்டினார். இதில் அவருக்கு தலையில் 3 வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இனியனுக்கும், அஜய்க்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், இனியனை வெட்டிய அஜய் மற்றும் அவரது உறவினர்கள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மாநகராட்சி விளையாட்டு திடல் பகுதியில் இருந்த வியாசர்பாடி சாமந்திப்பூ காலனி பகுதியை சேர்ந்த அஜித் (எ) வெள்ள அஜித் (25) என்பவரிடம் சென்று தகராறு செய்து அவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு 2 இடங்களில் தலையில் வெட்டு விழுந்தது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்துக்கும், அஜய்க்கும் ஒரு வருடத்திற்கு மேலாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வியாசர்பாடியில் 2 இடங்களில் நடந்த இந்த சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி கூட்செட் அருகே பதுங்கி இருந்த வியாசர்பாடி நேரு நகர் 3வது தெருவை சேர்ந்த அஜய் (எ) கருவாடு அஜய் (19) என்பவரை கைது செய்தனர். இவர் மீது வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த 2 சம்பவங்களில் அஜய்க்கு மட்டும் தான் தொடர்பு உள்ளதா அல்லது அவரது உறவினர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்