முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், வருவாய்த்துறை செயலாளர் மீது விசாரணை; பரிந்துரைக்க வலியுறுத்தி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி.உதயகுமார், வருவாய்த்துறை செயலாளர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஊழல் ஒழிப்பு துறைக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி நஞ்சவராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருப்பூர் நஞ்சராயன் குளக்கரையில் நீர்வழி பாதையில் உள்ள 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஒன்றரை கோடி ரூபாய்க்கு தனியார் பள்ளியை நடத்திவரும் டிரஸ்டிற்கு விற்பனை செய்ததில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடைய அதிமுகவின் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், முன்னாள் வருவாய்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா  மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்களாக இருந்த கோவிந்தராஜன் விஜய கார்த்திகேயன் மீது விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் , நில விற்பனையை ரத்து செய்து நீர்நிலை புறம்போக்கு வகைப்பாடு செய்து நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி நஞ்சராயன் குல பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 440 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற்றின் குறுக்கே  அமைந்துள்ளது  நஞ்சராயன் குளம். தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் கடந்த 05-04-2022 ல் அறிவிக்கப்பட்டுள்ளது, 181 பறவை இனங்கள், 40 வகை பட்டாம்பூச்சிகள், 76 வகை தாவரங்கள், 11 வகை நீர்வாழ் உயிரினங்கள், மற்றும் 16 வகை பூச்சி இனங்களுக்கு வாழிடமாகவும்,  வெளிநாட்டு பறவைகள் வலசை பாதையில் தங்கி செல்லும் இடமாகவும், 800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது. தற்போது இந்த குளத்தின் கரையில் இருந்து சாலை வரை  50 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஏக்கர் நிலத்தை வெறும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு குளத்திற்கு எதிரில் இயங்கிவரும் விகாஸ் வித்யாலயா பள்ளியை நடத்திவரும் விகாஸ் சேவா டிரஸ்டிற்கு தமிழ்நாடு அரசால் அளிக்கப் பட்டுள்ளது.அந்நிறுவனம் தற்போது குளக்கரையிலிருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது, ஏரியின் நீர் கசியும் பகுதியாகவும், இரண்டு மதகுகளிலும் இருந்து   நீர் வெளியேறி செல்லும் இடமாகவும், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் வசிக்கும் பகுதியாக உள்ள இடத்தை நீர் நிலையாக, பறவைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக அறிவிப்பு செய்யாமல் ஏரியின் கரை முதல்கொண்டு அடிமாட்டு விலைக்கு தனியார் பள்ளிக்கு தாரை வார்க்கப்பட்டது.இது திருப்பூர் மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே விகாஸ் சேவா டிரஸ்ட்க்கு அடிமாட்டு விலைக்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்ததை ரத்து செய்யக் கோரியும்,  மேற்படி நிலத்தை நீர் நிலையாக வகைப்பாடு செய்யக் கோரியும், நில விற்பனையில் நடைபெற்றுள்ள ஊழல் மீதும்,இதற்கு துணைபோன அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் அந்த துறைசார்ந்த அதிகாரிகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் மற்றும் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது….

Related posts

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு

திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பலி