முத்துப்பேட்டை பகுதியில் கடந்து செல்ல முடியாதபடி சாலையை மறைக்கும் கருவேல மரங்கள்-கொட்டப்படும் குப்பை கழிவால் தொற்று நோய் பரவும் அபாயம்

*இது உங்க ஏரியாமுத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பகுதியில் குப்பை கழிவுகள், சாலையை சூழ்ந்துள்ள கருவை மரங்களால் கிராம மக்கள் நோய் தொற்று மற்றும் கடந்து சென்று வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.முத்துப்பேட்டை பேரூராட்சி எதிர்புறம் செல்லும் பட்டறைகுளம் கரையோரம் செல்லும் சாலையில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அதேபோல இந்த சாலை வழியாக கிட்டங்கி தெரு சென்று அங்கிருந்து பல பகுதிக்கு செல்ல இந்த சாலையை அதிகளவில் சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தற்போது பெண்கள் பயன்படுத்த முடியாதளவில் உள்ளது. சாலை எங்கும் கருவேல மரங்கள் படர்ந்துள்ளது. சாலையும் மக்கள் நடந்து செல்ல முடியாதளவில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் உள்ள விளக்குகளும் எரியாததால் இரவில் இருண்டு காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் செல்கிறனர்.அதே போல் சாலையோரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த பலர் குப்பை கழிவுகளை இங்கு வந்து கொட்டி வருகின்றனர். குறிப்பாக பஸ் நிலையம் பகுதியில் இருக்கும் பழக்கடைகள் வீணாகிய பழங்களை இங்கு வந்து கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் அல்லாததால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.அதேபோல் இப்பகுதி ஒதுக்குப்புறமான பகுதியாகவும் இரவில் இருண்டு காணப்படுவதால் குடிமகன்களின் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இப்பகுதியில் உள்ள சாலையோரம் மற்றும் பட்டறைகுளம் சுற்றிலும் உள்ள கருவை மரங்களை அகற்றி அப்பகுதியையும் குளத்தையும் சுத்தம் செய்து தரவேண்டும். குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும். தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக்கும், இப்பகுதியில் கூடும் குடிமகன்களையும் சமூக விரோதிகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கூறுகையில்:இப்பகுதி முழுவதும் அசுத்தமாக இருப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் வருகிறது. பொது குடிநீர் குழாய் இருந்தது. அது தற்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் நாங்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். எங்களுக்கு இப்பகுதியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பழனிவேல் என்பவர் கூறுகையில், சாலை நெடுவேங்கும் கருவை மரங்கள் மண்டி உள்ளது. இதனால் நடந்து செல்லகூட முடியவில்லை. பலர் இந்த பகுதியை குப்பை கிடங்கு போல் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தினால் வசிக்க முடியவில்லை. அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த பலனுமில்லை. பேரூராட்சி எதிரேயே இப்படி ஒரு அவலமாக இருப்பது வேதனையை தருகிறது என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி காளிமுத்து கூறுகையில், இந்த பட்டறைகுளத்தை சுற்றி சாலையோரம் சுகாதார சீர்கேடு ஏற்ப்பட்டுள்ளது. பலமுறை பேரூராட்சி நிர்வாகம் முதல் கலெக்டர் வரை புகார் மனு அனுப்பினேன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறேன் என்றார்….

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்