Tuesday, October 1, 2024
Home » முதுமையில் ஆனந்தம்!

முதுமையில் ஆனந்தம்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர் வாழ்வியல் குறிப்புகள்!முதியோருக்குப் பொருத்தமான, பாதுகாப்பான, வசதியான தடையற்ற வசிப்பிட சுற்றுச்சூழலை அமைக்க வேண்டியது தொடர்பான புரிதல் தற்போதுதான் உருவாகிவருகிறது. இது தொடர்பான வாழ்வியல் மாற்றுகள் என்னென்ன என்று பார்ப்போம். பயன்படுத்தும் வசதிஅனைத்து வசிப்பிடமும் இளைஞர், முதியோர் மற்றும் எல்லாவிதமான நபர்களுக்கும் ஏற்ற வகையில் கட்டப்பட வேண்டும். வசிப்பிடச் சூழல் வீட்டின் அனைத்து வசதிகளையும் இளைஞர், முதியோர் மற்றும் எல்லா விதமான நபர்களும் சுலபமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கட்டப்பட வேண்டும்.தற்காப்புகட்டப்பட்ட வசிப்பிட வடிவமைப்புச் சூழல் அனைவரும் சுலபமாக நுழைந்து, எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சுலபமாக செல்ல முடிகிற வகையில் இருக்க வேண்டும். மேலும் திடீரென்று ஏற்படும் பேரழிவு மற்றும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் சமயங்களில் சுலபமாக இடத்தைக் காலி செய்யும் வசதி இருக்க வேண்டும் என்பதும் மிக மிக முக்கியம்.பணிபுரியும் வசதிவடிவமைப்பு, முதியோரைத் தங்கள் வேலையை தாங்களே செய்து கொண்டு சுயசார்புடன் வாழ வழி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.அக்கறையுடன் வடிவமைக்கப்பட்ட சுற்றுச் சூழல் முதியோர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, சுதந்திரமாக இருக்கும் உணர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உருவாக்கும். எனவே, வீட்டின் உள்ளே கட்டப்பட்ட சூழல் & வெளியே உள்ள பொது இடங்கள் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.இந்த இரண்டின் வடிவமைப்பு நோக்கத்திற்கு இடையேயான ஒருங்கிணைப்பு, உடல் நிலைமை அத்துடன் இணைந்த சேவைகள் முதியோர்களை அவர்களுடைய குடும்பத்திலும் சமூகத்திலும் நீண்ட காலத்திற்கு நர்சிங் ஹோம் போன்ற பராமரிப்பு மையங்களின் உதவி இல்லாமல் சுதந்திரமாக தனித்து செயல்பட உதவும். இந்த முறையில் தடை இல்லாமல் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் முதியவர்களோடு இணைந்து வாழக்கூடிய சூழலை உருவாக்கும். சமூகத்தை எல்லா வயதினருக்கும் இசைவானதாகவும் மாற்றும்.நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாசல்நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாசல் சாலையிலிருந்து தெளிவாகப் பார்க்க முடிகிற வகையிலும், சுலபமாகப் பயன்படுத்திக் கொள்கிற வகையிலும் கட்டப்பட வேண்டும். நுழைவாயில் தெருவின் மட்டத்தைவிட அதிகமாக இருந்தால், சரிவுப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஒரு தளத்தைவிடக் கூடுதலான தளங்களை உடைய வீடுகளில் சவுகரியமான படிக்கட்டுகள் தவிர, கண்டிப்பாக சரிவுப் பாதைகள், லிஃப்டுகள் அமைக்கப்பட வேண்டும்.சரிவுப் பாதைகள்இவை சக்கர நாற்காலி, வாக்கர்கள் பயன்படுத்தும் முதியோருக்கு கட்டிடத்திற்குள் போகவும் வெளியே வரவும் உதவும். எனவே, சரிவுப் பாதைகளின் சாய்வு 1:12 க்குக் குறைவாக இருக்கக் கூடாது. குறைந்தபட்ச அகலம் 120 செமீ மற்றும் அதிக பட்ச அகலம் 6 மீட்டர்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தரையிரங்கும் வழிக்கு ஏறக்குறைய 180 செமீ இடம் ஒதுக்கப்பட வேண்டும். சாய்வுப் படிக்கட்டுகளில் இரண்டு பக்கங்களிலும் 10 செமீ உயரமுள்ள கைப்பிடிகள் பொருத்தப்பட வேண்டும்.கதவுகள்சக்கர நாற்காலி அல்லது வாக்கர்கள் நுழையும் விதமாக அனைத்துக் கதவுகளும் குறைந்தபட்சம் 80 செமீ அகலம் இருக்க வேண்டும். தெளிவான, குறைந்தபட்சம் 150 செமீ x 150 செமீ அளவுள்ள இடம் முன்னாலும் அந்தளவுள்ள இடம் அதற்கு அப்பாலும் விடப்பட வேண்டும். கதவுகள், ஜன்னல்கள் முதியோருக்கு இயக்குவதற்கு எளிதாக உள்ள பொருள்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களின் பூட்டுகளைத் திறக்கவோ அல்லது மூடவோ மணிக்கட்டு அல்லது விரல்களின் பயன்பாடு அவசியமாக இருக்கக் கூடாது. லீவர் வகை கைப்பிடிகள் மிகவும் சவுகரியமானவை.மாடிப் படிகள்கட்டடங்களின் மாடிப்படிகள் நீளம் 150 செமீ, கால் வைக்கும் இடத்தில் அளவு 300 செமீ. இருக்கும் படிகள் முதியோர்களுக்குக்கூட ஏற, இறங்க வசதியாக இருக்கும். மாடிப்படிகளின் இரு பக்கங்களிலும் உள்ள சுவற்றில் கைப்பிடிகள் இருப்பது அவர்களுக்கு மேலும் சுலபமானதாக இருக்கும். திருப்பங்களில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் முக்கோண வடிவப் படிகள் தவிர்க்கப்பட வேண்டியவை. படிகளின் இடையே திறந்த இடைவெளி இருப்பது முதியோர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அவர்களுடைய கால்களோ அல்லது வாக்கிங் ஸ்டிக்குகளோ அதில் மாட்டிக்கொண்டு தடுமாறி விழும் வாய்ப்பு உள்ளது. படிகளின் உயரம் சாய்வாக இருந்தால் நல்லது. கால் வைக்கும் இடம் வழுக்காத தரையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவற்றின் முனைகளில் வழுக்காத சட்டங்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். பார்வைக் குறைபாடு உள்ள முதியோர்களுக்காகப் படிகளின் நீள அகலங்களில் எதிரும் புதிருமான வண்ணங்களைப் பூசுவது அவர்கள் படிகளைத் தெளிவாகப் பார்க்க உதவியாக இருக்கும்.நடைபாதைபொது இடங்களில், நடைபாதை அளவுகளில் மாற்றங்களைப் பொருத்து, கையால் பிடித்துக்கொள்ளும் விதத்தில் சங்கிலிகள் தொங்கவிடப்பட வேண்டும். இந்த நடைபாதைகள் தொடர்ச்சியாகவும், சக்கர நாற்காலியில் போகும் அளவுக்கு அகலமாகவும் இருக்க வேண்டும். சில இடங்களில் மற்றொரு சக்கர நாற்காலி கடந்து போக வசதியாகக் கூடுதல் அகலமாக இருக்கலாம். முதியோர்கள் சுயமாக அங்கும் இங்கும் போய் வர, வீடுகளின் நடைபாதைகளில், காரிடார்களில், தோட்டத்திற்குச் செல்லும் பாதைகளில், பார்க்குகளில் உறுதியான கைப்பிடிகள் இரு பக்கங்களிலும் அமைப்பது அவர்கள் நடமாட்டத்திற்கு மேலும் உதவிகரமாக இருக்கும். பார்வை பாதிப்படைந்த முதியோர் வசதிக்காகத் தரைகள், தளமிடப்பட்ட நடைபாதைகள் இவற்றின் ஓரங்களை வேறுபட்ட நிறங்களில் அமைப்பது நல்லது.கட்டட வடிவமைப்புகட்டடம் நல்ல வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். முதியோர் எங்கு வேண்டுமானாலும் சிரமம் இல்லாமல் போய்வர அதன் இட வசதிக்கான வடிவமைப்பு அல்லது திட்டம், எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். காரணம், பெரும்பாலோருக்கு நினைவாற்றல் குறைந்துவிடுகிறது. அடைசலான அறைகள், ஒழுங்கற்ற முறையில் போடப்பட்ட கம்பளங்கள், மிதியடிகள், தவறான இடத்தில் அமைக்கப்பட்ட தோட்டம், வெளியில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகள், வழி காட்டி கம்பங்கள் இவை அனைத்தும் முதியோர் தடுக்கி விழுந்து காயம் ஏற்படுத்திக் கொள்ள வழிவகுக்கின்றன. பெரும்பாலான முதியோருக்கு சிறுநீர் கழிப்பது கட்டுப்பாடில்லாது போய்விடுவதால், கழிப்பறைகள் சவுகரியமான இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.ஒளிகட்டடங்களுக்குள் போதுமான இயற்கை வெளிச்சம் வர வேண்டும். ஜன்னல்களின் மேல் சரியான இடங்களில் பகல் நேர சூரிய வெப்பத்தின் கடுமையைத் தடுக்கும் விதமாக, நிழல் மறைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரவு நேரத்தில் இருட்டான, வெளிச்சமான இடம் போன்ற மிக எதிர்ப்பதமான இடங்கள் குறைவாக இருத்தல் நல்லது. ஏனென்றால், பார்வைக் குறைபாடு உள்ள முதியவர்கள் இருட்டான இடத்திலிருந்து வெளிச்சமான இடத்திற்கு மற்றும் வெளிச்சமான இடத்திலிருந்து இருட்டான இடத்திற்கு வரும்போது தங்கள் கண்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வதில் அவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது.கழிப்பறைகள்வீட்டில் குறைந்தபட்சம் ஒரே ஒரு கழிப்பறையாவது வாக்கர், சக்கர நாற்காலி முதலியவற்றை உபயோகிப்பவர் நுழையும் விதத்திலும், கதவை மூடிக்கொண்டு, தங்களைக் கழிப்பிட இருக்கையில் அமர்த்திக் கொள்ளும் வகையில் பெரிதாகக் கட்டப்பட வேண்டும். சக்கர நாற்காலியை இயக்க இடம், குறைந்தபட்சம், 150 செ.மீ மற்றும் அதைத் திருப்புவதற்கான இடம் 2.2 சதுர அடிகளை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். கழிப்பிடங்களில், சிறுநீர் கழிக்கும் இடங்கள், கை கழுவும் பேசின்கள் மற்றும் ஷவர் இடங்கள் போன்ற முதியோருக்கு உதவும் வகையில் பொருத்தமான இடங்களில் கைப்பிடிகள் (இரும்பினால் ஆனது நல்லது) அமைக்கப்பட வேண்டும். சக்கர நாற்காலியில் இயங்கும் நபர்கள் எளிதாக அடையும் விதத்தில் கழிப்பறைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். கழிப்பறை மற்றும் சமையல் அறைகளில் உள்ள டைல்ஸ்கள் வழுக்காத தன்மை உடையதாக இருக்க வேண்டும். வழுக்குவதால் விழுவதைக் குறைக்க ரப்பர் சேர்க்கப்பட்ட மிதியடிகள் ஷவர் இருக்கும் இடங்களில் வைக்கப்படுவது நல்லது.சுத்தம் & பாதுகாப்புமுதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து போவதால், வழ வழப்பான சுவர்கள் அமைப்பது நல்லது. அவற்றில் தூசி தங்குவது மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றின் முனைகளை உருண்டையாக அமைத்தால் முதியோர் காயம் பட்டுக்கொள்வது மிகவும் குறையும்.ஒலி அமைப்புஒலியை உள்வாங்கிக்கொள்ளும் சாதனங்கள்: பெரும்பாலான முதியோர்கள் மிகவும் குறைவான கேட்கும் சக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அறைகளில் திரைச் சீலைகள், கம்பளங்கள், துணியாலான மேஜை நாற்காலி கவர்கள், சுவர்களின் மேலே தொங்க விடப்படும் வேலைப்பாடமைந்த துணிகள் முதலிய ஒலியை உள்வாங்கிக் கொள்ளும் சாதனங்கள் பயன்படுத்துவதால் பெருமளவில் ஒலியின் எதிரொலியைக் குறைத்து, முதியோர் தெளிவாகக் கேட்க உதவுகின்றன.அழகியல்தடை இல்லா சுற்றுச்சூழலை வழங்குவதோடு, கூடவே செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், அழகுணர்வுடன் கவரும் வண்ணம், சுத்தமான மற்றும் நன்கு பராமரிக்கப்படும் சூழலுடன் அமைப்பது. இது முதியவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதில் அற்புதங்களை நிகழ்த்துகிறது.சாராம்சம்வடிவமைப்பும் தடை இல்லா வசிப்பிட சுற்றுச்சூழலும் வழங்க இன்னும் அதிகமான இடமோ அல்லது நிறைய செலவோ செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இப்படிப்பட்ட தடை இல்லாத கட்டட வடிவமைப்பு தத்துவத்தின்படி அமைக்கப்பட்ட எந்த வசிப்பிடமும் அனைவருக்கும் நல்ல பலன்கள் தரும். காரணம், இன்றோ நாளையோ நாம் அனைவருமே முதுமையடையத்தான் போகிறோம்.தொகுப்பு : சரஸ்

You may also like

Leave a Comment

eight + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi