முதுமலை புலிகள் காப்பகத்தில் 350 கிமீ தூரத்திற்கு: தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி விரைவில் துவக்கம்

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க 350 கிமீ தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை மழை பெய்யும். இதனால், அனைத்து வனப்பகுதிகளும் பசுமையாக காட்சியளிக்கும். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை கடும் பனி பொழிவு காணப்படும். இச்சமயத்தில் தேயிலை தோட்டங்கள் மட்டுமின்றி வனப்பகுதிகளில் உள்ள சிறிய மரங்கள் மற்றும் செடி, கொடிகளும் உறை பனியில் கருகுவது வழக்கம். இச்சமயத்தில் நீலகிரியில் உள்ள வனங்கள் காய்ந்து போய்விடும். குறிப்பாக, முதுமலை, மசினகுடி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் முற்றிலும் காய்ந்து காணப்படும். இந்த சமயங்களில் காட்டு தீ வனப்பகுதிகளுக்குள் ஏற்பட்டு பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனங்கள் எரிந்து நாசமாகி வருகிறது. இதனை தடுக்க, ஆண்டுதோறும் முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படும். இம்முறை கடந்த வாரம் வரை மழை பெய்ததால், வனங்கள் இன்னும் பசுமையாக காட்சியளிக்கிறது. தற்போது, பனி பொழிவு அதிகமாக உள்ளதால் அடுத்த சில நாட்களில் வனங்கள் காய்ந்து போய்விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த வாரம் முதல் முதுமலையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது. இம்முறை 350 கிமீ தூரத்திற்கு இந்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கென தீ தடுப்பு காவலர்கள் 60 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், காட்டு தீ ஏற்படும் இடங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் காட்டு தீ ஏற்படாமல் வனத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, மசினகுடி – தெப்பக்காடு சாலை, தொரப்பள்ளி – கக்கநல்லா சாலை, முதுமலை மற்றும் பண்டிப்பூர் எல்லை பகுதிகள், முதுமலை மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தீ தடுப்பு காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளுக்குள் சென்று புகை பிடிப்பது, மது அருந்துவது, தீ மூட்டுவது மற்றும் சமையல் செய்வதை தவிர்க்கவும் வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.  இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண் கூறியதாவது: முதுமலையில் காட்டு தீ ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 350 கிமீ தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளது.  தீ தடுப்பு காவலர்கள் 60 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, வனத்துறை ஊழியர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வாகன ஓட்டுனர்களுக்கும் காட்டு தீ ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை