முதுநிலை மருத்துவ படிப்புக்கு 12ம் தேதி கலந்தாய்வு: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 12ம் தேதி தொடங்கப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளாமோ படிப்புகளுக்கு 40 ஆயிரத்தும் இடங்களும், தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உட்பட மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்ததால், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு கடந்த நவம்பர் 11ம் தேதி ஆன்லைனில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நீட் தேர்வு முடிவுகளை கடந்த செப்டம்பர் 28ம் தேதி தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டது. 800 மதிபெண்களுக்கு நடைபெற்ற நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினர் உட்பட) 302 மதிப்பெண், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உட்பட) 265 மதிப்பெண், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகள் 283 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. கொரோனாவால் நீட் தேர்வு தாமதம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருந்த பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு போன்ற காரணத்தால் கடந்த அக்டோபர் மாதத்தில் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால் ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு பணிச் சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியது. தேவையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகினர். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்த வேண்டும் என்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தலாம் என கடந்த 7ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் நேற்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பதிவில், இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 12ம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் இடங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்தப்படும். அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கிய பின்னர், மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வை நடத்தவுள்ளது. இதே நடைமுறையை பின்பற்றி பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை