முதியவர் கொலையில் கைதான தொழிலாளி, கள்ளக்காதலி சேலம் சிறையில் அடைப்பு-பரபரப்பு வாக்குமூலம்

சேலம் : சேலம் அருகே  முதியவர் கொலையில் கைதான தொழிலாளி, கள்ளக்காதலி சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை செய்தது ஏன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சேலம் அடுத்த வீராணம் குள்ளம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன்(50), பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(48) என்பவருடன், கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார். கடந்த 19ம் தேதி மாலை, வலசையூர் சந்தையில் சந்திரன், மாரியம்மாள் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மேளவாத்திய கலைஞர் கந்தசாமி ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சந்திரன், கந்தசாமியை கட்டையால் அடித்துக்கொலை செய்தார். இதுபற்றி வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரன் மற்றும் அவரது கள்ளக்காதலி மாரியம்மாளை கைது செய்தனர். கைதான சந்திரன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:சந்திரனும், கந்தசாமியும் நேற்று முன்தினம் மேளம் அடிப்பதற்காக, ஒன்றாக சென்றுள்ளனர். இதில் ₹800 கூலி கிடைத்துள்ளது. அதில் கந்தசாமி ₹500 எடுத்துக்கொண்டு, ₹300ஐ சந்திரனிடம் கொடுத்துள்ளார். பின்னர், அவர்கள் ஒன்றாக மது குடிக்கும் போது, கூலியை சரிசமமாக பிரிக்க வேண்டும் என கேட்டு சந்திரன் தகராறு செய்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பணத்தை சரிசமமாக தராவிட்டால் அடித்துக்கொலை செய்து விடு என்று மாரியம்மாள் கூறி உள்ளார். இதனால் ஆவேசமடைந்த சந்திரன், அருகில் இருந்த விறகு கட்டையால் கந்தசாமியின் தலையில் சரமாரி அடித்துக் கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.விசாரணைக்கு பிறகு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சந்திரனை ஆத்தூர் கிளைச்சிறையிலும், மாரியம்மாளை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்….

Related posts

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை