முதல் சதம் அடித்ததை எண்ணி மகிழ்கிறேன்; தொடர், ஆட்டநாயகன் கில் பேட்டி

ஹராரே: ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ஷிகர்தவான் 40 (68), கே.எல்.ராகுல் 30 (46) ஆகியோர் சுமாரான துவக்கத்தை தந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். இவருக்கு இஷான் கிஷனும் ஒத்துழைப்பு கொடுத்ததால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.இந்நிலையில் இஷான் கிஷன் 50 (61) அவுட்டானார். தொடர்ந்து வெளுத்து வாங்கிய கில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். நிலையில் அடுத்து தீபக் ஹூடா 1 (3), சஞ்சு சாம்சன் 15 (13), அக்சர் படேல் 1 (4) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் கில் சிறப்பாக ஆடி 95 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 130 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் 289/8 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இறங்கிய ஜிம்பாப்வே அணியில் ஓபனர்கள் கைடானோ 13 (22), இன்னோசென்ட் 6 (9) ஆகியோர் சொதப்பிய நிலையில், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் 45 (46) அபாரமாக ஆடினார். தொடர்ந்து மற்ற பேட்டர்கள் சொதப்பிய நிலையில் 5வதாக களமிறங்கிய சிக்கந்தர் ராசா, 9ம் இடத்தில் களமிறங்கிய பிராட் எவான்ஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். 8-வது விக்கெட்டுக்கு சிக்கந்தர் ராசா, எவான்ஸ் ஜோடி 104 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிக்கந்தர் ராசா 115 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்தியா ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. இந்திய அணியில் ஆவேஷ்கான் 3 விக்கெட், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. தொடரை கைப்பற்றிய பின் ஷுப்மன் கில் கூறுகையில், “அனைத்து பந்துகளிலும் ரன் எடுக்கவே விரும்பினேன். பந்துகளை வீணடிக்காமல் அதே நேரத்தில் விரைவாக ரன் குவிக்க நினைத்தேன். அதன்படி வீசப்பட்ட பந்துகளை கணித்து விளையாடினேன். இருப்பினும் காட்டுத்தனமாக விளையாடவில்லை. எவான்ஸ், ராசா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். பேட்டிங்கிற்கு இந்த பிட்ச் சாதகமாக இருந்தது. நான் 50 ரன்னை கடந்த பின்னர்தான் ஆட்டத்தை மாற்றினேன். சதம் அடிப்பது சிறப்பானது. இதுவரை 3 முறை 90 ரன்களை தொட்டுள்ளேன். இங்கு முதல் சதம் அடித்ததை எண்ணி மகிழ்கிறேன்’’ என்றார்….

Related posts

பைனலில் கோகோ – முச்சோவா; சீனா ஓபன் டென்னிஸ்

மகளிர் உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை; குவாலியரில் இன்று முதல் டி20 போட்டி: இரவு 7.00 மணிக்கு தொடக்கம்