முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

சங்கரன்கோவில்,ஜூலை 30: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக குழந்தை கடத்தலுக்கு எதிராக சங்கரன்கோவிலில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ பேசினார். குழந்தை கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்களம் சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை கீதாவேணி தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, அனைத்து மகளிர் எஸ்ஐ அமராவதி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுமதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அருணா லட்சுமி, சமூக நலத்துறை காபிரியேல், திமுக நகரச்செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மனித உரிமை கல்வி காப்புக்களம் இயக்குநர் பரதன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜா எம்எல்ஏ பேசுகையில் ‘‘இன்று பெண் குழந்தைகள் படிக்கும் வயதில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடுகிறது. இருப்பினும் இதை கருத்தில்கொள்ளாமல் கல்வி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வியில் சிறப்பாக பயின்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். இளம்வயதில் எதிர்கொள்ள நேரிடும் காதல் உள்ளிட்ட எந்த ஒரு விஷயங்களிலும் தலையிடாமல் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உழைக்க வேண்டும். மகளிர் பாதுகாப்பில் அகில இந்திய அளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. மாணவிகள் தாங்கள் ஏதாவது எதிர்பாராத பிரச்னையை சந்திக்க நேர்ந்தால் 1098 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.

அதில் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்பட்டு உங்களுக்கான பிரச்னையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். அதே போல பெண்கள் உதவி எண் 181 என்ற எண்ணையும், உங்களது அலைபேசியில் யாரேனும் உங்களிடம் தவறான பதிவுகளை செய்யும் சூழ்நிலையில் சைபர் கிரைம் உதவி எண்ணான 1930 என்ற எண்ணை அழைத்தால்பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களை மீட்க சம்பந்தப்பட்ட அரசு துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். இப்பள்ளியில் சேதமான கட்டிடங்களை சரி செய்யவும், விளையாட்டு மைதானம் அமைத்து தருவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, சகி ஒருங்கிணைப்பாளர் சேவை மையம் முருகேஸ்வரி, மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்களம் மேரி, ஒன்றியச் செயலாளர் பெரியதுரை, வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் பிச்சையா, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் வீரா, வீரமணி, வெங்கடேஷ், காவல்கிளி, சதீஷ், ஜெயக்குமார் ஜான், விக்னேஷ், ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆங்கில ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி