முதல்வர் தொகுதி என்பதால் ஆர்வம் கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரியில் புதிய மாணவர் சேர்க்கை தொடக்கம்: 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

பெரம்பூர், மே 12: கொளத்தூரில் உள்ள கபாலீசுவரர் கல்லூரியில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். கொளத்தூரில் இயங்கி வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மாலை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இக்கல்லூரி தொடங்கப்பட்டு 3வது ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது அளிக்கப்பட்டன. இந்த கல்லூரியில் ஏற்கனவே 460 பேர் பயின்று வருகிற நிலையில், புதிதாக இதுவரையில் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களால் பெறப்பட்டுள்ளன. கல்லூரியில் பிகாம், பி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட பல படிப்புகளும், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கோயில் சம்பந்தமான வகுப்புகளும் நடந்து வருகின்றன. சைவ சித்தாந்த வகுப்புகளும் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறோம். இந்த கல்லூரி அமைந்தது இந்த பகுதியில் வாழுகிற ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. இந்த கல்லூரியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான முதல்வரே தனது சீரிய முயற்சியில் கல்லூரிக்கு உண்டான கட்டணத்தையும் கட்டி, ஆண்டுதோறும் புதிதாக சேருகிற மாணவச் செல்வங்களுக்கு புத்தாடைகளையும் வழங்கி வருகிறார். பாட புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்களையும் கடந்த 2 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

பல்வேறு வகையில் கல்வியின் தரத்தை உயர்த்தி, பள்ளி முதல் கல்லூரிகள் வரை இன்றைக்கு இடைநிறுத்தம் இல்லாமல் சிறப்போடு மாணவச் செல்வங்கள் அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர். இதற்கு உறுதுணையாக உள்ள எவர்வின் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் புருஷோத்தமன் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருவிக நகர் மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், பகுதி திமுக செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

3வது ஆண்டாக…
கபாலீசுவரர் கல்லூரியில் 3வது ஆண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. கல்லூரியில் ஏற்கனவே 460 பேர் பயின்று வருகின்றனர். புதிதாக இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கல்லூரியில் பிகாம், பி.ஏ., பி.பி.ஏ. உள்ளிட்ட பல படிப்புகளும், திருக்கோயில் சம்பந்தமான வகுப்புகளும், சைவ சித்தாந்த வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

புத்தகம், புத்தாடை இலவசம்
கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கிற மாணவ, மாணவிகளுக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலினே தனது சீரிய முயற்சியில் கல்லூரி கட்டணத்தையும் செலுத்தி, ஆண்டுதோறும் புதிதாக சேரும் மாணவர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கி வருகிறார். பாடப் புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்களையும் கடந்த 2 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை