முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி; வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கல்

கோவை, செப்.29: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகோவை இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, இந்த விளையாட்டு போட்டிகளில் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற வீரர்களுக்கு ரூ.3 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்ற வீரர்களுக்கு ரூ.2 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற வீரர்களுக்கு ஆயிரமும் என அவர்களின் வங்கிக்கணக்கில் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 52 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 12 வகையானபோட்டிகளும் என மொத்தம் 64 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் பிரிவில் 1449 பேர், கல்லூரி பிரிவில் 16,809 பேர், பள்ளி பிரிவில் 18,679 பேர், பொதுப்பிரிவில் 2167 பேர், மாற்றுத்திறனாளிகள் ஆண்கள் 654 பேர், என மொத்தம் 39,738 நபர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து, அதில் 25,000 பேர் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு நபர்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் மூலம் மாணவர்களின் திறமையை வெளிகாட்டும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தற்போது மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள வீரர்கள் அடுத்ததாக மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அதிக அளவிலான பதக்கங்களை பெற்ற மாவட்டம்கோவை மாவட்டம் என்ற பெருமையை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சரஸ்வதி கண்ணையன், விளையாட்டுத் துறை மண்டல இணை இயக்குநர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து