முதல்வருக்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு

சென்னை: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்ட காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும், ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும், பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் ரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் அனைத்தும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் முதல்வர் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள். அதை மாற்றாமல் அப்படியே அறிவித்துள்ளார். அதற்கு ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் தியாகராஜன்: எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்அடிப்படையில் தற்போதும் இந்த அரசு செயல்படுகிறது. இது லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தனது தந்தையை விட ஒருபடி மேலே போய்விட்டார் முதல்வர். இதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தாஸ்: முன்னாள் முதல்வர் கலைஞர் வழியில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அரவணைக்கும் பாங்கு வரவேற்கத்தக்கது. எங்களின் மீது எப்போதும் அக்கறை கொண்டு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தற்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதற்கு நன்றி. இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் செயலாளர் ராபர்ட்: பேரவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அவற்றில் ஆசிரியர் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் மயில்: பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை நியமனம் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் நீக்கப்படும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வயது வரம்பை கருத்தில் கொள்ளாமல் மகன்கள், மகள்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்புக்கும் நன்றி. இவ்வாறு கூறியுள்ளனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு