முதல்முறையாக கால அட்டவணை அறிமுகம் அடுத்தாண்டு மார்ச்சுக்குள் 35 ஆயிரம் பேருக்கு வேலை: ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: போட்டித் தேர்வின் முடிவை வெளியிடுவதிலும், ஊழியர்கள் நியமனம் எந்த தேதிக்குள் முடிக்கப்படும் என்பதையும் முன்கூட்டியே தெரிவிக்கும் கால அட்டவணை நடைமுறையை ரயில்வே முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில்  ஸ்டேஷன் மாஸ்டர்கள், கூட்ஸ் கார்டுகள், கமர்ஷியல் பிரிவு ஊழியர்கள், டிக்கெட் கிளார்க், சீனியர் கிளார்க் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ரயில்வே தேர்வு வாரியம் நடத்தி உள்ளது. மொத்தம் 35,281 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணபித்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு பல கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளின் முடிவு, நியமனம் தொடர்பான அட்டவணையை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டது.  இது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வேயில் 6ம் நிலை பணியிடங்களுக்கான தேர்வு  முடிவுகள் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இதில், 7,124 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவை தற்போது நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 21 மண்டல ரயில்வே தேர்வு வாரியங்களில் 17 மண்டலங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. மீதி உள்ள மண்டலங்கள் விரைவில் தேர்வு முடிவுகளை அறிவிக்கும். 5ம் நிலை பணியிடங்களுக்கான முடிவுகள் இந்த மாதம் இறுதியில் இருந்து அடுத்த மாதம் 2ம் வாரத்துக்குள் வெளியிடப்படும். நான்காம் நிலை ஊழியர்களுக்கான முடிவுகள்  வரும் ஜனவரி 2ம் வாரம் வெளியிடப்பட்டு பிப்ரவரி மாதத்துக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும். 3ம் நிலை பணியிடங்களுக்கு மார்ச் முதல் வாரத்துக்குள் முடிக்கப்படும். அதேபோல்  2ம் நிலை பணியாளர்களுக்கு மார்ச் மாதம் கடைசிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு