முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர கால அவகாசம் பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம்  வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவின் தரவரிசை பட்டியல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜனவரி 27ம் தேதி அன்றும், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 28ம் தேதி நடத்தப்பட்டது. பொதுப்பிரிவினருக்கான முதற்சுற்று இணையவழி கலந்தாய்வு கடந்த 30ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி  வரை  நடைபெற்று பட்டியல் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களின் சேர்க்கை ஆணையில் மாணவர்கள் அவர்தம் மருத்துவக் கல்லூரிகளில் வரும் 16ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தப்பட்டது. தற்போது மாணவர்கள் மற்றும் ெபற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கான முதலாம் ஆண்டு கால அவகாசம் பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான வகுப்புகள் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளபடி நேற்று முதல் துவங்கியுள்ளது. துவக்க நாள் முதல் ஆரம்ப அறிமுக வகுப்புகள் நடைபெறும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவ  மாணவர் தேர்வுகுழு செயலர் வசந்தாமணி ஆகியோர் கூறியதாவது: தேசிய மருத்துவ  கமிஷன் அறிவுறுத்தல்படி, முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.  மாணவர்கள் பீதியடைய தேவையில்லை. தற்போது, அறிமுக வகுப்புகள் மட்டுமே  நடத்தப்படும். இரண்டாம் கவுன்சிலிங் மார்ச் 1ம் தேி துவங்க வாய்ப்புள்ளது.  அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் பெற்ற 544 பேரில்  541 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சேராத மூன்று மாணவர்கள் குறித்து  விசாரணை நடத்தப்படும். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், ‘ராக்கிங்’  தடுப்பு குறித்து கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள்  உறுதி செய்யப்பட்டால் காவல்துறை உதவியுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவரின் படிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது  கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் அணுகும் பட்சத்தில்,  சுயநிதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் செலுத்த ஒருவாரம் அவகாசம் பெற்று  தரப்படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பது  குறித்து புகார் வந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினர். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகள், 14  சுயநிதி கல்லூரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.  சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு  மாணவர்களை மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, ரோஜா பூ கொடுத்து  வரவேற்றார். அதைப்போன்று அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை