முக்கூடலில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு

பாப்பாக்குடி: முக்கூடல் மெயின் ரோட்டில் அப்பகுதியை சேர்ந்த பொன்பெருமாள் மகன் சுரேஷ் (43) என்பவர் நடத்திவரும் மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட கூலிப், குட்கா உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து விற்றுவந்தார். பல முறை வழக்குப்பதிந்து கைது செய்தபோதும், உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த போதும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இதுவரை அவர் மீது 5 வழக்குகள் உள்ள நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், முக்கூடல் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் உதவியுடன் சுரேஷ் கடைக்கு சீல் வைத்தனர். பின்னர் இதுகுறித்து பாப்பாக்குடி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கிருஷ்ணன் கூறுகையில் ‘‘தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்று வந்ததால் தற்காலிகமாக சீல் வைத்துள்ளோம். மீண்டும் இதுபோன்று செயல்பட்டால் கடை நிரந்தரமாக மூடப்படும்’’ என்றார். பின்னர் இதுகுறித்து சேரன்மகாதேவி டிஎஸ்பி  ராமச்சந்திரன் கூறுகையில் ‘‘இன்றைய காலக்கட்டத்தில் படிக்கும் குழந்தைகள் கூலிப், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அறியாமையால் உட்கொண்டு தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்வதால் இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எந்த கடைகளிலாவது அரசால் தடைசெய்யப்பட்ட இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்வதை உடனடியாக காவல் துறைக்கு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’’ என்றார்….

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!