முக்கிய குற்றவாளியை பிடிக்க திருச்சிக்கு தனிப்படை விரைவு

சேலம், ஜன.8: சேலத்தில் வாலிபரின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான பெண் உள்பட முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படையினர் திருச்சிக்கு சென்றுள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் ஆலந்துடையான்பட்டியை சேர்ந்தவர் தியாகு(25). இவர் சேலத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த பாலன்(எ)பாலகிருஷ்ணன்(26) அவரது மனைவி வரலட்சுமி(22) மற்றும் சுரேஷ்(31) ஆகியோரை சூரமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இதில் சுரேஷ் போலீஸ் பிடியில் சிக்கினார். சமயபுரத்தில் மொட்டை அடித்திருந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், துறையூர் ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த பாலனுக்கும் தியாகு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

பாலன் இன்னொருவரின் மனைவியை அழைத்துக்கொண்டு சேலத்தில் வசித்து வந்துள்ளார். தியாகுவும், பாலனும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது கட்டிட வேலைக்கு சென்றால் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என பாலன் கூறியதை நம்பி தியாகு சேலத்துக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது சம்பவத்தன்று இரவு சிக்கன் வாங்கி மதுகுடித்து சாப்பிட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுவை தியாகுவுக்கும், சுரேசுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் தான் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த கொலையில் சுரேசும் ஈடுபட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார், அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள பாலன், வரலட்சுமி ஆகியோரை கைது செய்ய தனிப்படை போலீசார், துறையூர், திருச்சிக்கு விரைந்துள்ளது. அங்கு பாலன், வரலட்சுமியின் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு