முகூர்த்த நாட்களில் வரும் குஜராத் சட்டமன்ற தேர்தல்: மக்கள் வாக்களிக்க வருவார்களா?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் ஒன்று, ஐந்தாம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் சுபமுகூர்த்த நாட்களாக இருக்கின்றன. கொரோனா நோய் தொற்று பரவல், கட்டுப்பாடுகளால் தவித்து வந்த பொதுமக்கள் தற்போது தான் திருமணங்களை நடத்தி வருகின்றனர். சுபமுகூர்த்த நாட்களாக இருப்பதால் பொதுமக்கள் திருமண விழாவிற்கான வேலைகளில் ஈடுபடுவது, உறவினர்கள், நண்பர்களின் திருமணத்துக்கு செல்வது என்று மிகவும் பரபரப்பாக காணப்படுவார்கள். இந்த நாளில் நேரத்தை ஒதுக்கி தேர்தலில் வாக்களிப்பதற்கு வருவார்களா என சிலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, நவம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை அதிக விசேஷமான முகூர்த்த தினங்கள் வருவதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2, 4 மற்றும் 8ம் தேதி சுபமூகூர்த்த நாட்களில் அதிக திருமணங்களுக்கு நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்காக திருமணங்களை ஒத்திவைக்க முடியாது, ஆனால், சிறிது நேரம் ஒதுக்கி தேர்தலில் வாக்களிக்கும்படி அவர்களை சமரசம் செய்வதற்கு முயற்சிப்போம் என்று குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி தெரிவித்துள்ளார். இதேபோல், ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் கரன் பரோட் கூறுகையில், ‘‘எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு நல்ல வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வது மக்களின் பொறுப்பாகும். திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தாலும் தேர்தலில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றார். …

Related posts

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு